3 குழந்தைகளை கொன்ற தந்தை.. பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆந்திராவில் ஷாக்
Andhra Murder : ஆந்திரா மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக, மூன்று குழந்தைகளை தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்று குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து, தந்தையும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆந்திரா, செப்டம்பர் 05 : ஆந்திர மாநிலத்தில் 3 குழந்தைகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குழந்தைகளை தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர், அவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்திவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆந்திரா மாநிலம் பிரகாச பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (36). இவர் உரக் கடை நடத்தி வருகிறார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 8, 6 மற்றும் 4 வயதுடைய மூன்று குழந்தைகள் இருந்தனர். இந்த தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.
இதன்படி, 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி தம்பதிக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து, வெங்கடேஸ்வர்லு தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள அச்சம்பேட்டையின் ஹாஜிபூருக்குச் சென்றார். இதற்கிடையில், வெங்கடேஸ்வர்லுவின் சகோதரர் மல்லிகார்ஜுன ராவ் வெங்கடேஸ்வர்லு மற்றும் அவரது குழந்தைகள் காணாமல் போனதாக வெல்தண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Also Read : அடிக்கடி ரீல்ஸ் செய்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ஷாக் சம்பவம்.. டெல்லியில் பகீர்!




3 குழந்தைகளை கொன்ற தந்தை
புகாரின்பேரில், போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளையு ஆய்வு செய்து வந்தனர். ஹாஜிபூரில் உள்ள சிசிடிவி காட்சிகளில், வெங்கடேஸ்வர்லு மூன்று குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதைக் காட்டியது. பின்னர் வெல்தூரில் உள்ள கேமராக்கள் எட்டு வயது மகளுடன் மட்டும் அவர் சென்றது சிசிடிவில் தெரிந்தது. இதனை அடுத்து, போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இரண்டு இடங்களுக்கும் இடையிலான ஏழு கிலோமீட்டர் தூரத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மூன்று குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஸ்ரீசைலம் பகுதியில் வெங்கடேஸ்வர்லு உடல் கண்டெடுக்கப்பட்டது. 4 உடல்களையும் கைபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனைக்கும் அனுப்பினர். மேலும், பெண் தீபாவிடமும் விசாரணை நடந்து வருகிறது. குடும்ப பிரச்னையால் மூன்று குழந்தைகளை தந்தை கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read : மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி.. பிரேத பரிசோதனையில் பகீர்.. சென்னையில் சோகம்!
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)