சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள் என்னென்ன?.. அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்..
Rules after Assembly election dates announcement: கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும்
சென்னை, மார்ச் 15: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் உள்பட ஐந்த மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே சம்பந்தப்பட்ட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் (Model code of conduct) உடனடியாக அமலுக்கு வரும். இந்த விதிகள் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும். அவ்வாறு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எப்போது? இன்று வெளியாகும் அறிவிப்பு
தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்:
தேர்தல் முடியும் வரை எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது, பிரச்சாரத்தின் போது கட்சிகளுடைய தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது, ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது. அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது.
முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்:
கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். பொதுக் கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தனிநபர்கள் மீது நடவடிக்கை கூடாது:
பொதுக்கூட்டம் ஒழுங்காக நடை பெறுவதற்கு தடையாக அந்த கூட்டத்தில் இருக்கும் யாரேனும் செயல்பட்டால் அந்த கூட்டத்தை நடத்துபவர்கள் அந்த தனிநபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; அவர்கள் காவல்துறையைத்தான் நாட வேண்டும். பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.
தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது:
பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால நடவடிக்கைகள் ஆகியவற்றையே விமர்சிக்க வேண்டும். வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது. தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரி பார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்க: திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு எப்போது?.. முதல்வருடன் கனிமொழி ஆலோசனை!!
ஆவணமின்றி பணம் எடுத்துச் செல்ல முடியாது:
இதில், குறிப்பாக ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சிறப்பு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்வார்கள். இந்த தொகை இந்த தேர்தலில் அதிகரிக்கப்படுமா என்பது இன்று மாலை தெரியவரும்.