நீட் ஹால் டிக்கெட்டில் பெரும் குளறுபடி.. நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கீடு!
Neet Exam Center Abu Dhabi: மகாராஷ்டிர மாநிலத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவருக்கு ஐக்கிய அரபு அமீர நாடான அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை விளக்கமளித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை ஜூன் 21- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) நீட் மறு தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தேர்வு நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிந்ததை அடுத்து, இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி வந்த மாணவர்கள் நாளை தேர்வு எழுத உள்ளனர். இதற்காக அனைத்து மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மகராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த ஒரு மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரை சேர்ந்த இந்த மாணவருக்கு முன்பு நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு சரஸ்வதி வித்யாலயா தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் புதிதாக ஹால் டிக்கெட் வழங்கப்பட்டன. அதன்படி, அந்த ஹால் டிக்கெட் அந்த மாணவர் பதிவிறக்கம் செய்து பார்த்த போது அதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி இந்தியன் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.
வெளிநாடு செல்லும் அளவுக்கு வசதியில்லை
இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த போது மாணவரின் முதல் விருப்பமாக நாக்பூர், அடுத்ததாக வர்தா, பண்டாரா ஆகிய தேர்வு மையங்களை குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், தற்போது வெளியிடப்பட்ட நீட் தேர்வு நுழைவு சீட்டில் வெளிநாட்டில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த தேர்வில் பங்கேற்பதற்காக எங்கள் பிள்ளையை வெளிநாட்டிற்கு அனுப்ப எங்களால் முற்றிலும் இயலவில்லை.
மேலும் படிக்க: நீட் மறுதேர்வை முன்னிட்டு இந்தியாவில் டெலிகிராமுக்கு தற்காலிக தடை: பாவல் துரோவ் எதிர்ப்பு




தேசிய தேர்வு முகையிடம் புகார் அளிப்பு
வெளிநாடு செல்வதற்கு எனது மகனிடம் பாஸ்போர்ட் கிடையாது. மேலும், பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு எங்களிடம் நேரமும் இல்லை என்று என் அந்த மாணவனின் தந்தை முகமது தலிப் கூறினார். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் உதவி எண்ணுக்கு புகார் அளித்தனர். அதற்கு தேர்வு முகமை பிழையை ஒப்பு கொண்டதாகவும், சரிபார்ப்புக்குப் பிறகு திருத்தப்பட்ட ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கண்டனம்
இந்த சம்பவத்தை மகாராஷ்டிராவின் முன்னாள் கல்வி அமைச்சர் அனீஸ் அகமது தேர்வு ஆணையத்தின் பெரும் குறைபாடு என்று விமர்சித்துள்ளார். இந்த தவறை உடனடியாக சரி செய்து அந்த மாணவருக்கு நாக்பூர் அல்லது அருகே உள்ள நகரத்தில் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என்று தேசிய தேர்வு ஆணையத்தை வலியுறுத்தினார். இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் படிக்க: இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்.. 6 மாத லிவ்-இன் வாழ்க்கை.. இறுதியில் கொலையில் முடிந்த சோகம்!!