த.வெ.க அரசு மீதான குதிரை பேர புகார்.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..
இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகளிடையே கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் அளவுக்கு குதிரைப் பேரம் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 19, 2026: தமிழக வெற்றிக்கழக தலைமையிலான அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனு மீது இன்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவைப்பட்டது.
குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக புகார்:
எனவே, திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் தாவேக அரசு அமைந்தது.
மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டிருந்த சூழலில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் திமுக கூட்டணிக் கட்சிகள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. அதேபோல், அதிமுக இதற்கு எதிராக வாக்களித்தது. திமுக வெளிநடப்பு செய்தது.
இந்தச் சூழலில், அதிமுகவைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர். மொத்தம் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றிக்கழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
சிபிஐ விசாரணை தேவை – மனு மீது இன்று விசாரணை:
இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகளிடையே கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் அளவுக்கு குதிரைப் பேரம் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ரிட் மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி. மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு:
அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மே 13ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய, அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்.. வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை.. 3 பேர் கைது!!
அந்த விவகாரம் நிலுவையில் இருந்தபோதிலும், மே 25ஆம் தேதி மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களும், மே 26ஆம் தேதி ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வும் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனர். அரசியல் லாப நோக்கத்துடன் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளதால், இந்த விவகாரத்தில் குதிரைப் பேரம் நடைபெற்றுள்ளது.
எனவே, இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்ததுடன், வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.