பெட்டிக் கடை உரிமையாளருக்கு ரூ.141 கோடிக்கு வந்த வருமான வரி நோட்டீஸ்.. அதிர்ச்சி சம்பவம்!
Income Tax Notice | அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதித்து அதற்கான வரியை செலுத்தவில்லை என்றால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும். அந்த வகையில், சிறிய மளிகை கடை வைத்து நடத்தும் நபர் ஒருவருக்கு ரூ.141 கோடிக்கான வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலந்த்சாகர், செப்டம்பர் 02 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) வீட்டில் சிறிய மளிகை கடை வைத்து நடத்தி வந்த நபருக்கு ரூ.141 கோடிக்கான வருமான வரி நோட்டீஸ் (Income Tax Notice) வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளுக்கு ஆயிரங்களில் கூட வியாபாரம் நடைபெறாதா அந்த மளிகை கடைக்கு கோடி கணக்கில் வருமான வரி நோட்டீஸ் வந்தது அந்த வியாபாரியையும், அவரது குடும்பத்தினரையும் கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மளிகை கடை உரிமையாளருக்கு கோடியில் வந்த வருமான வரி நோட்டீஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மளிகை கடை உரிமையாளருக்கு கோடியில் வருமான வரி நோட்டீஸ்
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதிர். இவர் தனது வீட்டில் ஒரு சிறிய மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதி மக்களுக்கு தேவையான சிறிய அளவிலான மளிகை பொருட்கள், காய்கறிகளை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், 2025 ஜூலை மாதம் அவரது கடையில் ரூ.141 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை அவரது வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை கண்டு அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் அவர் உடனடியாக தனது பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் இரங்கல் செய்தி.. அடுத்த நாள் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்!




பான் கார்டு மோசடியில் சிறு வியாபாரிக்கு வந்த பகீர் நோட்டீஸ்
தனக்கு வந்த வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த சுதி அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது, டெல்லியில் உள்ள 6 நிறுவனங்கள் எனது பான் கார்டை தவறாக பயன்படுத்தி வருகின்றன. 2022 ஆம் ஆண்டும் எனக்கு இதேபோல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு எனக்கும் அந்த நிறுவனங்களுடன் எந்த தொடர்பும் இல்லை. தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : மூட நம்பிக்கையின் உச்சம்.. பேரனை நரபலி கொடுத்த தாத்தா.. பகீர் வாக்குமூலம்!
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதாரண பெட்டிக் கடை உரிமையாளருக்கு ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.