Vijay: எனக்கு எதுவும் வேண்டாம்.. ஃபேர்வெல் பார்ட்டியை மறுத்த விஜய்!
Jana Nayagan Movie Update: விஜய்யின் 69வது படமான ஜனநாயகன் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் அவருக்கு ஃபேர்வெல் பார்ட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விஜய் இதனை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு அரசியலில் ஈடுபட உள்ள விஜய், தனது சினிமா பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

ஜனநாயகன் (Jananayagan) படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் விஜய்க்கு (thalapathy vijay) ஃபேர்வெல் பார்ட்டி கொடுக்க திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய். 1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அவர், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ள ஜனநாயகன் படத்துடன் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில் கொடுத்த வாக்குறுதியின்படி ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்கள் தகவல்களாக வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் படம்
பொங்கலுக்கு வருகிறோம்!
ಸಂಕ್ರಾಂತಿಗೆ ಬರುತ್ತಿದ್ದೇವೆ!
సంక్రాంతికి వస్తున్నాం!
पोंगल पर आ रहे हैं!
പൊങ്കലിന് വരുന്നു!
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju… pic.twitter.com/WIYOpyyQlN
— KVN Productions (@KvnProductions) March 24, 2025




நடிகர் விஜய்யின் 69வது படமாக உருவாகிறது ஜனநாயகன். இளம் கமர்ஷியல் இயக்குநர் என பெயரெடுத்த ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். பீஸ்ட் படத்துக்குப் பின் பூஜா ஹெக்டே மீண்டும் விஜய்க்கு ஹீரோயினாகி உள்ளார். அதுமட்டுமல்லாமல் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, பாபா பாஸ்கர், வரலட்சுமி சரத்குமார், ரேவதி, டீஜே அருணாச்சலம், பிரியாமணி, நரேன், பிரகாஷ்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இப்படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்த அப்டேட் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு ஃபேர்வெல் பார்ட்டி
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் ஜூன், ஜூலைக்குள் தன்னுடைய பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட விஜய் திட்டமிட்டுள்ளார். அவரின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஜனநாயகன் ஷூட்டிங் இன் இறுதி நாளில் விஜய்க்கு ஃபேர்வெல் பார்ட்டி நடத்த பட குழுவினர் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் விஜய் அதனை பணிவுடன் மறுத்து விட்டதாகவும், வழக்கமாக ஷூட்டிங்கின் கடைசி நாளில் தான் மிகவும் உணர்ச்சி வசப்படுவேன் என விஜய் கூறியதாக லெட்ஸ் சினிமா தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விஜய் அரசியலுக்கு செல்லும் நிலையில் அவருக்கு எத்தனை ஆண்டு காலம் நம்மை மகிழ்வித்ததற்காக நிச்சயம் சிறந்த பிரியாவிடை கொடுத்தாக வேண்டும் என்ற முனைப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.