திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட காரணம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது!
Trichy East Constituency: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்ய என்ன காரணம், அந்தத் தொகுதியில் போட்டியிட என்ன காரணம், அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள் அந்தக் கட்சியின் தலைவர் விஜய். அதன்படி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களத்தில் தமிழக வெற்றி கழகம் களம் இறங்க இருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதில், கட்சியின் தலைவரான விஜய் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளார். இதில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள விஜய், வருகிற ஏப்ரல் 2- ஆம் தேதி ( வியாழக்கிழமை) திருச்சி கிழக்கு தொகுதிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியை தேர்வு செய்ய காரணம்
இந்த நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியை விஜய் எதற்காக தேர்வு செய்தார். அந்த தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கான காரணம் என்ன என்பது குறித்த கேள்வி அந்த கட்சியினர் மட்டுமின்றி அந்த தொகுதி மக்களின் மனதில் எழுந்துள்ளது. இதில், சென்னையை தவிர்த்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியையும் விஜய் தேர்வு செய்ததற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என 3 மதத்தினரும் இணைந்து வாழும் ஒரு தொகுதியாக விளங்கி வருகிறது.
மேலும் படிக்க: நெல்லை தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்!!
மும்மதத்தினர் அருகருகே வாழும் பகுதி திருச்சி
இந்த தொகுதியில் திருச்சி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கி வரும் மலைக்கோட்டை, நந்தர்வலி தர்கா, மெயின்கார்டு கேட் புனித லூர்து அன்னை ஆலயம் என 3 மதங்களுக்கான வழிபாட்டுத் தலங்களும் அருகருகே அமைந்துள்ள நகரமாக திருச்சி விளங்கி வருகிறது. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் இந்துக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இதே போல, வரகனேரி, பாலக்கரை, காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த 3 மதங்களின் சின்னங்களும் அருகருகே இருந்தாலும் சாதி மற்றும் சமூக மோதல்கள் இந்த பகுதியில் நடந்தது இல்லை.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட காரணம்
எனவே, இந்த தொகுதியில் விஜய் ரகசியமாக ஒரு சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. அதில் இந்த தொகுதியில் பெரும்பாலானோர் கல்வி அறிவு பெற்றவர்களாகவும், வியாபாரிகளாகவும் இருந்து வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி வெற்றி பெற்றதற்கு சிறுபான்மையினர் ஆதரவு இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்டால் வெற்றி உறுதியாக கிடைக்கும் என்பதன் அடிப்படையில் இந்த தொகுதியை தேர்வு செய்து போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரமாதமாக இருப்பதாக அந்த ரகசிய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் படிக்க: பிரச்சாரத்தின்போது திடீரென தண்டவாளத்தில் படுத்த மன்சூர் அலிகான் – காரணம் இதுவா?