நெல்லை தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்!!
Tamilnadu Assembly Election: டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டியிருந்ததால் தொகுதிகளின் எண்ணிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக விளக்கினார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று மாலை சென்னை வரவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற வேட்பாளர் பட்டியல்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
Tamilnadu Polls 2026: சட்டமன்றத் தேர்தலில் தான் நீண்டகாலமாகப் போட்டியிட்டு வந்த திருநெல்வேலி தொகுதியை விட்டுக்கொடுத்து, சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? என்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, டெல்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்கு பிள்ளை என்ற பழமொழிக்கு ஏற்ப, எங்கு நின்றாலும் திருநெல்வேலிக்கு நான்தான் செல்லப்பிள்ளை. ஏற்கெனவே, பலமுறை நெல்லை தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறேன். இம்முறை அதிமுகவுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணா திமுக இந்தத் தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், அண்ணா திமுக கேட்டுக் கொண்டதற்கிணங்க தொகுதி மாறினேன். அண்ணா திமுக வசம் இருந்த சாத்தூர் தொகுதியில் இந்த முறை நான் போட்டியிடுகிறேன். தொகுதி மாறினாலும் திருநெல்வேலி மக்கள் மீது எனக்கு என்றும் தனி அக்கறை உண்டு,” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு சிக்கல் – பெண் அளித்த பரபரப்பு புகார்




சட்டம் ஒழுங்கு சீர்குலைவு:
தமிழகத்தின் தற்போதைய ஆட்சி குறித்துப் பேசிய அவர், திமுக அரசு கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். திமுக அரசின் 5 ஆண்டு கால செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து பாஜக சார்பில் இன்று மாலை விரிவான ‘குற்றப்பத்திரிகை’ தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை தமிழக அரசு செயல்படுத்தாமல் முட்டுக்கட்டை போடுவதாகச் சாடினார். மின் கட்டணம் மற்றும் சொத்து வரி 300% வரை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை “ஜீரோ” என்றும் விமர்சித்தார்.
உள்நோக்கம் எதுவுமில்லை:
டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டியிருந்ததால் தொகுதிகளின் எண்ணிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக விளக்கினார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று மாலை சென்னை வரவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற வேட்பாளர் பட்டியல்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் கூறினார். பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் அண்ணாமலையின் பெயர் விடுபட்டது குறித்த கேள்விக்கு, அவர் ஊரில் இல்லாத காரணத்தினாலேயே வரவில்லை என்றும், இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிக்க: 500 சவரன் நகை, சொகுசு கார்கள், ரூ. 1 கோடி வைரம்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
வெற்றி வாய்ப்பு:
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தனது கருத்துக் கணிப்பாக அவர் தெரிவித்தார். ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் இந்த ஆட்சிக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.