தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறத் துடிக்கும் விஜய்.. புதிய வியூகம் வகுத்த தவெக..
மற்ற கட்சிகளின் குதிரை பேரங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு தற்காப்பு அரணாகப் பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்புகளைப் பொருட்படுத்த வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்திய விஜய், வெற்றி பெறும் வேட்பாளர்கள் சான்றிதழைப் பெற்றவுடன் எவ்வளவு நேரம் ஆனாலும், நேராகப் பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாகக் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில், வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், அவை அனைத்தும் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், தவெகவும் இரட்டை இலக்கத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கலவையான முடிவுகளைக் கொடுத்துள்ளன. இது பொதுமக்களையும் அரசியல் கட்சிகளையும் ஒருவித குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: விஜய்க்கு 41% வாக்குகள்.. 121 இடங்கள்.. கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி..
தவெக-வின் எதிர்பார்ப்பு: தொங்கு சட்டசபை அமையுமா?
சில கருத்துக்கணிப்புகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15 முதல் 20 தொகுதிகள் வரை கிடைக்கும் எனக் கூறினாலும், அக்கட்சியின் உள்வட்டாரக் கணிப்புகள் 100 முதல் 120 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்புகின்றன. இதன் மூலம், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டசபை’ அமையும் என்றும், ஆட்சியைத் தீர்மானிக்கும் ‘கிங் மேக்கர்’ இடத்தைத் தவெக பிடிக்கும் என்றும் அக்கட்சித் தலைமை எதிர்பார்க்கிறது.
வேட்பாளர்களுடன் விஜய் நடத்திய ஆலோசனை:
இந்த அரசியல் சூழலை முன்னிட்டு, கட்சித் தலைவர் விஜய் தனது வேட்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் அவர் முன்வைத்த முக்கியமான விஷயங்கள் பின்வருமாறு, முதலாவதாக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வேட்பாளர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்களா என்பதை விஜய் நேரடியாகவே கேட்டறிந்தார். மற்ற கட்சிகளிலிருந்து வந்து இணைந்த 118 வேட்பாளர்களிடம் இந்த விசுவாசத்தை உறுதி செய்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
குதிரை பேரத்தைத் தடுத்தல்:
தேர்தல் முடிவுகளுக்குப் பின் உறுப்பினர்கள் சிதறாமல் இருப்பதையும், மற்ற கட்சிகளின் குதிரை பேரங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு தற்காப்பு அரணாகப் பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்புகளைப் பொருட்படுத்த வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்திய விஜய், வெற்றி பெறும் வேட்பாளர்கள் சான்றிதழைப் பெற்றவுடன் எவ்வளவு நேரம் ஆனாலும், நேராகப் பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
திமுக அல்லது அதிமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தனது கட்சியின் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலையை உருவாக்கி, தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறத் துடிக்கிறார் விஜய்.
நிர்வாகிகளின் நம்பிக்கை:
233 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர் (எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சைக்கு ஆதரவு). தவெக தனிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், இரட்டை இலக்கத் தொகுதிகளில் வென்று ஒரு பலமான அரசியல் சக்தியாக மாறும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் உறுதியாக நம்புகின்றனர்.
இதையும் படிக்க: “வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”.. முகவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
விஜய்யின் கிங் மேக்கர் கனவு:
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தவெக-வின் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலையை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், இரட்டை இலக்கத் தொகுதிகளில் வென்று சட்டமன்றத்தில் ஒரு பலமான சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே விஜய்யின் தற்போதைய வியூகமாக உள்ளது.