தமிழக முதல்வராக திருமாவளவன் வர வேண்டும்.. இது காலத்தின் கட்டாயம்.. சிந்தனைச் செல்வன்!
Vck General Secretary Sinthanai Selvan: தமிழகத்தின் முதல் அமைச்சராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை பதவி ஏற்க வைக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தெரிவித்தார். அவர் கூறியதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தின் முதல்வராக திருமாவளவன் வர வேண்டு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வியக்கத் தகுந்த அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இது திராவிட கட்சிகளுக்கு எதிரான மக்களின் கோபம் என்று சிலர் கூறுகின்றனர். மேலும், விஜய் மீதான ரசிக மனோபாவத்தால் ஒரு ஜென்சி அலை உருவாகியுள்ளது. ஆனால், இது அர்த்தமுள்ள அரசியல் மாற்றம் கிடையாது. இது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்று சிலர் கூறுகின்றனர். இந்த தேர்தலானது மனிதனுக்கும், வாக்குச்சாவடி இயந்திரத்துக்கும் இடையே நடைபெற்ற தேர்தல் ஆகும். மத்திய அரசு நியாயமான தேர்தலை நடத்துவதற்காக குறுக்கு வழியில் ஞானேஷ்குமாரை தலைமை தேர்தலாக நியமித்தது. பாஜகவுக்கு எதிரான மாநிலங்களில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடைபெற்றுள்ளது.
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது வாக்குச்சாவடி இயந்திர மோசடியால்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது வாக்குச்சாவடி இயந்திரத்தில் நடைபெற்ற மோசடி ஆகும். இதை தவிர வாக்காளர்களின் உணர்வு அல்ல என்பதை அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்த நிலையில், பொது இடங்களில் தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்கள் மது போதையில் நடனம் ஆடுவதும், தவெகவின் 2- ஆம் கட்ட தலைவர்களின் பின்னணி இவற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் அதிமுகவை குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திமுக ஆதரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் – மு.க ஸ்டாலின்..




திருமாவளவனை தமிழக முதல்வராக்க வேண்டும்
ரசிக மனநிலை உருவாக்கிய ஆபத்தில் இருந்து தமிழகத்தை காக்க திமுக அதிமுக கூட்டணி அமைத்தால் தான் நல்லது என்று பலர் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை முதல்வராக முன்மொழிந்து, அதை நோக்கி நகர்த்துவது தான் திராவிட கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய சரியான நிலைப்பாடாக இருக்கும் என எனக்கு தோன்றுகிறது. மாற்றம் வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்பியதால் தன் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்துள்ள அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவளவனை முதல்வர் ஆக்குவது தான் சரியாக இருக்கும்.
திருமா முதல்வராவது காலத்தின் கட்டாயமாகும்
சமூக நீதி மண் என்று பெருமை பேசும் நபர்கள் தமிழகத்தை காப்பாற்றுவதற்கு இப்படி ஒரு முடிவு எடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இது தமிழக மீது படிந்துள்ள அனைத்து கறைகளையும் நீக்கிவிடும். இரு பெரும் எதிர் துருவ இரு திராவிட கட்சிகளின் இடையே இது மட்டும் தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தமாக இருக்கும் என்று சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்.. தவெக அரசு அமைக்க முட்டுக்கட்டை போடும் அதிமுக பாஜக – எம்.பி கலாநிதி வீராசாமி..