“ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க”.. உங்களை நம்பியே களத்தில் இறங்குகிறோம்.. விஜய் உருக்கமாக பேச்சு!!
Tamilnadu Assembly Election: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்களை சென்னையில் தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார். இதையொட்டி, அந்த நிகழ்வில் பேசிய விஜய், மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என தெரிவித்தார். பழைய ஒட்டுப்போட்ட கூட்டணி என்றும், மக்கள் நலக் கூட்டணி என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
Tamilnadu Polls 2026: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார். அதோடு, தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் அறிவித்தார். சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்வில் பேசிய விஜய், இதை வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது மக்களுக்கான ‘காப்பாளர்கள்’ அறிமுகக் கூட்டம். ஒரு எம்எல்ஏ என்பவர் தொகுதிக்கான எல்லைக் காப்பாளராக இருக்க வேண்டும். களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களையே வேட்பாளராக தேர்வு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: “2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்”.. தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளேன்:
ஒரு எம்எல்ஏ என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றால் அனுபவத்தை வைத்து கொள்ளை அடிப்பவர்களாக இருக்கக்கூடாது. அனுபவத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்கும் நிருபரை அடிக்கும் எம்எல்ஏவாக இருக்கக்கூடாது. எம்எல்ஏ என்றால் அனுபவத்தை வைத்துக்கொண்டு கனிமவளங்களை கொள்ளை அடிப்பவர்களாக இருக்கக்கூடாது. எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் நானே நிற்க முடியாது என்பதால் என் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். ஒவ்வொரு வேட்பாளரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளேன், அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.
திமுகவுக்கும் – தவெகவுக்கும் இடையே தான் போட்டி:
மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என தெரிவித்தார். திமுக கூட்டணியை பழைய ஒட்டுப்போட்ட கூட்டணி என்றும், மக்கள் நலக் கூட்டணி என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, நல்லாட்சி கொடுப்பேன், ஊழல் கரை படிய விடமாட்டேன் என உறுதிமொழி அளித்தார்.
விஜய் அளித்த உத்தரவாதம்:
மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன். ஊழல் கறை படிய விடவே மாட்டேன். பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவேன். ஒரு நாளும் மக்கள் விரோத செயலில் ஈடுபட மாட்டேன். இது சத்தியம், மக்களே இது உறுதி மொழி எல்லாம் கிடையாது. உத்தரவாதம் என்றார்.
தொடர்ந்து, இந்த தேர்தல் பாமர மக்களுக்கும், ஏமாற்று பேர் வழிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல். நல்லவங்களுக்கும் நாட்டை நாசப்படுத்துவர்களுக்கும் இடையே நடக்கும் போட்டி. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தவெக திமுக இடையே தான் போட்டி. விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையேயான ஆரோக்கியமான ஜனநாயக போட்டி என்றார்.
இதையும் படிக்க: பெரம்பூரில் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி – தவெக திட்டம் இதுதான்
உங்களை நம்பி களத்தில்:
நான் வேறு, வேட்பாளர்கள் வேறு அல்ல. நான் எப்படியோ.. அதே மாதிரி நான் நிறுத்துகிற வேட்பாளர்களும்.. இதயத்தில் உங்கள் விஜய் இல்லம் தோறும் உங்கள் வேட்பாளர். உங்கள் குரலுக்கு ஓடி வரும். நீங்கள் நினைத்ததும் ஓடி வரும் வேட்பாளர்களாகத் தான் இருப்பார்கள். என்னை மாதிரி உங்களை நம்பியே, வேட்பாளர்களும் உங்களை நம்பியே களத்தில் இறங்குகிறார்கள். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கேட்டுகொண்டார்.