புதுச்சேரியில் மீண்டும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?.. மக்கள் தீர்ப்பு என்ன?
வாக்கு எண்ணிக்கையில், காலை முதலே ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. விஜய்யின் தவெக 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே, தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், எந்த கட்சி முன்னிலையில் உள்ளது என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம். வாக்கு எண்ணிக்கையையொட்டி, அங்கு பாதுகாப்புப் பணிகளுக்காக 2,600க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 Results LIVE: தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? முன்னிலையில் தவெக!
இந்த தேர்தலில் புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் மொத்தம் 9,50,311 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 4,46,361. பெண் வாக்காளர்கள் 5,03,810. மூன்றாம் பாலினத்தவர்கள் 140. மொத்த வாக்காளர்களில் சுமார் 91.23 சதவீத வாக்குகள் அன்றைய தினம் பதிவானது. அதிகபட்சமாக உசுடு தொகுதியில் 94% வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக மாஹே தொகுதியில் 77.41% வாக்குகள் பதிவாகின.
புதுச்சேரியில் முன்னிலையில் யார்?
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில், காலை முதலே ஆளும் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. விஜய்யின் தவெக 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உப்பளம் தொகுதியில் அதிமுக புதுச்சேரி செயலர் அன்பழகன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.
முதல்வர் ரங்கசாமி வெற்றி:
இந்நிலையில், தற்போது புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் தற்போது காங்கிரஸ் எம்பி-யுமான வைத்தியலிங்கத்தை 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த முறை ரங்கசாமி வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியை பிடிக்கும் என்.ஆர்.காங்., – பாஜக கூட்டணி:
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படியும் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படியும் முதல்வர் ரங்கசாமி தலமையிலான என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.