AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிதி, மின்சாரத்தைத் தொடர்ந்து வேளாண் துறையிலும் ‘வெள்ளை அறிக்கை’.. தவெக அரசின் அடுத்த அதிரடி!!

தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலம் முதல் வேளாண் துறைக்கென தனியாக 'வேளாண் பட்ஜெட்' தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தற்போதைய தாவெக அரசும் அந்த நடைமுறையைத் தொடர்ந்து, விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களுடன் கூடிய தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

நிதி, மின்சாரத்தைத் தொடர்ந்து வேளாண் துறையிலும் ‘வெள்ளை அறிக்கை’.. தவெக அரசின் அடுத்த அதிரடி!!
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Jun 2026 11:42 AM IST

சென்னை, ஜுன் 27: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, முந்தைய ஆட்சிக் காலங்களின் நிதி மேலாண்மை மற்றும் திட்டச் செயல்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நிதித்துறை மற்றும் மின்சாரத் துறையைத் தொடர்ந்து, அடுத்ததாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த முதல் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டிருந்தார்.

இதையும் படிக்க: திமுகவுக்குள் ஒலிக்கும் இருவேறு குரல்கள்.. இடைத்தேர்தல் களம் குறித்து தீவிர யோசனையில் மு.க.ஸ்டாலின்!

தொடரும் ‘வெள்ளை அறிக்கை’ படலம்:

அதனைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் செலவினங்கள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விரிவான இரண்டாவது வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்தார். இந்த வரிசையில், தற்போது மூன்றாவது முக்கியத் துறையாக வேளாண் துறையை அரசு கையில் எடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், “வேளாண் துறையிலும் கடந்த காலங்களில் நடந்த முறையற்ற நிதிச் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன; விரைவில் இது முதலமைச்சரால் வெளியிடப்படும்” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

5 ஆண்டு கணக்குகளைத் தோண்டும் தவெக அரசு:

கடந்த 2021-2026 ஆம் ஆண்டு வரையிலான முந்தைய ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், வேளாண் துறைக்கு என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டன, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து அரசு தரப்பில் விரிவான தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

நிதிச் செலவினங்கள் ஆய்வு: விவசாயிகளுக்கான மானியங்கள், பயிர்க்காப்பீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயின் உண்மை நிலை ஆராயப்படுகிறது.

முதலீடுகள் மற்றும் முறைகேடுகள்: வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் நலத்திட்டங்களில் ஏதேனும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்தும் இந்த வெள்ளை அறிக்கை தெளிவுபடுத்தும் எனத் தெரிகிறது.

தனி வேளாண் பட்ஜெட்டுக்குத் தயாராகும் அரசு:

தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலம் முதல் வேளாண் துறைக்கென தனியாக ‘வேளாண் பட்ஜெட்’ தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தற்போதைய தாவெக அரசும் அந்த நடைமுறையைத் தொடர்ந்து, விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களுடன் கூடிய தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, முந்தைய ஐந்து ஆண்டுகளின் உண்மை நிலையை மக்கள் முன் வைப்பதே இந்த வெள்ளை அறிக்கையின் முக்கிய நோக்கம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டல்… தவெக இணை செயலாளர் அதிரடி நீக்கம்!

அரசியல் களத்தில் கிளம்பும் பரபரப்பு:

ஒவ்வொரு துறையாகத் தேடிப் பிடித்து தாவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த கால அரசின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் தாவெக அரசின் இந்த அதிரடி நகர்வுகள், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலும், இடைத்தேர்தல் பிரச்சாரங்களிலும் எதிரொலிக்கும் என்பதால் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Follow Us