தவெக தலைவர் விஜய் பிரம்மாண்ட ரோடு ஷோ… அனுமதி கோரி காவல்துறையிடம் மனு!
Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி கோரி அந்தக் கட்சியினர் மாநில சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஏப்ரல் 5- ஆம் தேதி ரோடு ஷோ நடைபெறவுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளும், இண்டி கூட்டணியில் காங்கிரஸ், திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகிய கட்சிகளும், மற்ற கட்சிகளும் தேர்தலை சந்திக்க உள்ளன. இதே போல, நேயம் மக்கள் கட்சியுடன், தவெக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 28 தொகுதிகளிலும், நேய மக்கள் கட்சி 2 தொகுதியிலும் போட்டியிட உள்ளது. இதற்கான வேட்பு மனுக்களை அந்தந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் சமர்ப்பித்துள்ளனர். இந்த வேட்பாளர்களை ஆதரித்து, புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஏப்ரல் 5- ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ
அதன்படி, வருகிற ஏப்ரல் 5- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) விஜய் ரோடு ஷோ நடத்துவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் மாநில தலைமை புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு விரிவான ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை மேற்கொண்டு இருந்தார். அப்போது, கரூர் சம்பவத்தை வைத்து அவருக்கு அனுமதி வழங்குவதில் சற்று தாமதங்கள் இருந்து வந்தன. பின்னர், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: ஜெயராஜ்-பென்னிக்ஸ் லாக்அப் மரண வழக்கு… 9 போலீஸ் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிப்பு!




புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதிக்கப்படுமா
தற்போது, ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தரப்பு அனுமதி கேட்டுள்ளது. புதுச்சேரியில் நகரப் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகலான சாலைகள் ஆகும். இதனால், நகரப் பகுதியில் விஜய் ரோடு ஷோநடத்தினால் அதிகளவிலான கூட்டம் கூடுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கரூர் சம்பவத்தை போல அசம்பாவிதங்கள் நிகழவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுமா என்பது சற்று சந்தேகம் உள்ளது.
ஏற்கெனவே ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் விஜய் பரப்புரை பயணத்தின் போது ரோடு ஷோ மேற்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், கரூர் சம்பவத்தை மையமாக வைத்து அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்தில், விஜய் பரப்புரை மேற்கொண்ட உப்பளம் துறைமுகம் பகுதியில் கியூ ஆர் கோடு வழங்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதிக அளவிலான கட்சியினர் அந்த பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால், அதிக அளவிலான கூட்டம் காணப்பட்டது.
மேலும் படிக்க: தவெகவில் இணைந்த சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ்!