எடப்பாடியில் தவெக வாஷ் அவுட்… வேட்பாளர் மாயம்… வேட்புமனு நிராகரிப்பு… என்ன காரணம்!
Tvk Candidate Arun Kumar : தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த அருண் குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதன்படி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அருண்குமார் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு மாற்றாக மற்றொரு நபரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில், எடப்பாடி தொகுதியில் அருண்குமார் தாக்கல் செய்த வேட்பு மனு பரிசீலனையில் சிறிய திருத்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதற்கு தேவையான திருத்தம் செய்ய வேண்டிய ஆவணங்களை கொண்டு வருவதாக கூறிவிட்டு அருண்குமார் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. ஆனால், வெகு நேரமாகியும் அவர் வராததால் கட்சியினர் அவர் மாயமாகி விட்டதாக தெரிவித்தனர். இதன் காரணமாக, எடப்பாடி தொகுதியில் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
தவெக வேட்பாளர் வேட்பு மனு நிராகரிக்கப்பட காரணம்
அத்துடன் அவருக்கு மாற்றாக மற்றொருவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இது, தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேட்பாளர் அருண்குமார் முன்மொழிந்த நபர்களை உறுதி செய்ய முடியாத காரணத்தால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
மேலும் படிக்க: ஸ்டார் தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதி… விஜய், திலகபாமா வேட்பு மனு ஏற்பு..




கடத்தப்பட்டரா தவெக வேட்பாளர்
எடப்பாடி தொகுதியில் அதிமுக திமுக நாம் தமிழர் கட்சி என 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே தவெக வேட்பாளர் அருண்குமார் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் வெளியே சென்று வருவதாக கட்சியினர் ஒருவரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவர் கடத்தப்பட்டதாகவும், மாற்றுக் கட்சியினரிடம் விலை போய் விட்டதாகவும் அந்த கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தவெகவினர்
தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக விளங்கி வரும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருப்பதும், அந்தக் கட்சியின் வேட்பாளர் அருண்குமார் மாயமாகி இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, தவெக வேட்பாளர் அருண்குமார் மாயமானதால் அந்த கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்த போது, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: Velachery Constituency Election 2026: வேகமாக வளர்ந்து வரும் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?