தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்பது எப்போதும் வடக்கில் இருந்து தான் வரும் – திமுக தலைவர் ஸ்டாலின்..
தமிழ்நாடு என்ற பெயரே சிலருக்கு கண் உருத்தலை ஏற்படுத்துகிறது. ‘தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடாது என்பது ஆளுநர் ஆர்.என். ரவியின் குரல் அல்ல; அது ஆர்எஸ்எஸ் குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது.
திருவள்ளூர், ஏப்ரல் 13, 2026: சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஆபத்து வடக்கிலிருந்து தான் வரும். அதனால் தான் தமிழ்நாட்டின் காவல் தெய்வங்கள் பெரும்பாலும் வடக்கு நோக்கி இருப்பதாக கூறப்படுகிறது,” என்றார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “தமிழ்நாட்டின் வடக்கு வாசலாக இருக்கும் திருவள்ளூருக்கு நான் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிக்கு வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு ஆபத்து வடக்கிலிருந்து தான் வரும்:
தமிழ்நாடு எப்போதுமே தனித்துவமான மாநிலம். அதற்கு காரணம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தான். பெரும்பாலும் தமிழ்நாட்டின் கிராமத் தெய்வங்கள் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும். ஏனெனில் தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கிலிருந்து தான் வரும்.
அப்படி எதிர்வரும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் தான் இந்தத் தேர்தல். இந்த திருவள்ளூரில் இன்று தான் பாஜக அரசை நோக்கி, ‘எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து கொண்டு வாருங்கள்; தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’ தான்’ என்று சவால் விட்டேன்.
2.0 ஆட்சி அமைத்தே ஆக வேண்டும்:
அந்த சவாலில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும். அதற்கு திமுக கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைத்தே ஆக வேண்டும். இல்லையெனில், நிர்வாகத்தால் மக்களை கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்கி, வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளிவிடுவார்கள்.
அப்பத்தை குரங்கு பங்கிட்ட கதை:
உங்களுக்கெல்லாம் ‘அப்பத்தை குரங்கு பங்கிட்ட கதை’ தெரியும். அதுபோல தான் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவை பங்கிட்டு கொண்டிருக்கிறது. பழனிசாமி என்னும் அடிமையை அடையாளம் கண்டு, அவரை அதிமுக தலைவராக அல்ல, பாஜக கிளைச் செயலாளராக நியமித்திருக்கிறார்கள்.
தனக்கு பதவி கிடைத்தால் போதும்; சம்பந்திகளுக்கு ரெய்டு நடக்காமல் இருந்தால் போதும். இதற்காக பழனிசாமி கொடுத்த விலை தான் தமிழ்நாட்டின் உரிமைகள். ‘இடம் கொடுத்தால் மடம் கேட்பான்’ என்பார்கள்; அதுபோல பழனிசாமி என்னும் அடிமை இருப்பதால்தான், அதிமுகவை வைத்து தேசிய ஜனநாயக ஆட்சி நடத்துவோம், இந்தி திணிப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் என பாஜக பேசிக் கொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் வளர்ச்சி என்பதே இல்லை:
கூவத்தூரில் தவழ்ந்து, ஊழலில் துளைத்து, உரிமைகளை இழந்து தமிழ்நாட்டை நாசப்படுத்திய ஆட்சிதான் பழனிசாமி ஆட்சி. அந்த ஆட்சியில் வளர்ச்சி நின்றுபோனது. பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வெறும் 0.07 சதவீதம் மட்டுமே. ஆனால் இன்று 11.19 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்தியாவுக்கே ரோல் மாடலாக தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாடு என்ற பெயரே சிலருக்கு கண் உருத்தலை ஏற்படுத்துகிறது. ‘தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடாது என்பது ஆளுநர் ஆர்.என். ரவியின் குரல் அல்ல; அது ஆர்எஸ்எஸ் குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது.
தைரியம் இருந்தால் ‘தட்சிணப் பிரதேசம்’ என்று பெயர் மாற்ற முடியுமா? இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார்,” என தெரிவித்துள்ளார்.