மீண்டும் கூட்டணியா? ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க பாஜக திட்டம்.. இன்று முக்கிய மீட்டிங்!
O Panneerselvam : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, கடந்த சில தினங்களாக அமைதி காத்து வருகிறார். இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக தெரிகிறது. 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் கூறப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட் 10 : அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை (O Panneerselvam) சமாதானப்படுத்த பாஜக (BJP Alliance) முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்திற்கு வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அதன் பிறகு, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம்.
இதனை அடுத்து, தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகிறது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தின் அணி இடம்பெருமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் தான், 2025 ஜூலை மாதம் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார். அவரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கூறியும் கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார்.
Also Read : ’எதுவும் நடக்கலாம்’ ஓபிஎஸ் சொன்ன வார்த்தை.. அடுத்த கட்ட நகர்வு என்ன?
ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க பாஜக திட்டம்
ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. அதற்கு முன்னதாக சென்னை வந்த அமித் ஷாவும் தன்னை சந்திக்காமல் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து, பிரதமர் மோடியும் அவரை சந்திக்க மறுத்ததால், தனக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை எனக் கருதி அதிருப்தியில் இருந்துள்ளார்.
இதனை அடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த விவகாரம் பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தன்னிடம் சொல்லி இருந்தால் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வாங்கி தந்திருப்பேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூற, அதற்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக மறுத்தார்.
பலமுறை போன் செய்தும் நயினார் நாகேந்திரன் பதிலளிக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதே நேரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன அறிக்கைகளை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலினை மூன்று முறை சந்தித்து பேசி உள்ளார். இதனால், திமுக பக்கம் ஓ.பன்னீர்செல்வம் திரும்புகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Also Read : பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. முன்வைத்த 3 முக்கிய கோரிக்கைகள்.. என்னென்ன?
இன்று முக்கிய மீட்டிங்
இந்த சூழலில் தான், ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணியில் அழைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் இருந்து விலங்கியதை அடுத்து, கடந்த சில தினங்களாக ஓ.பன்னீர்செல்வம் அமைதி காத்து வருகிறார். இதற்கிடையில் 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று தேசிய பாஜக பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
தமிழகத்துக்கு வருகை தரும் பி.எல். சந்தோஷ் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தெரிகிறது. பாஜகவில் மீண்டும் சேர ஓ.பன்னீர்செல்வத்திறகு அழைப்பு விடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக ஓபிஎஸை சமாதானப்படுத்தி அழைக்கும் பட்சத்தில், இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், பாஜக அதனை பொருட்படுத்தாமல் தங்கள் கூட்டணியை வலுசேர்க்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.