தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி?.. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?..
Tamilnadu Assembly Election: தங்களது மேடைப் பேச்சுகளில் ஒருவரது பெயரை மற்றொருவர் குறிப்பிடக் கூடத் தவிர்த்துவிட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கோரியதுடன், ஆட்சி, அதிகாரத்தில் பங்கும் கேட்டது இரு கட்சிகளுக்கும் இடையே கசப்பான சூழலை உருவாக்கியதாகப் பேசப்படுகிறது.
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரான ராகுல் காந்தி இதுவரை ஒருமுறை கூட தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்கு வராதது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பாஜக தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்துள்ளார். மேலும், வரும் ஏப்ரல் 15ம் தேதியன்று நாகர்கோவிலில் என்.டி.ஏ வேட்பாளர்களுக்காக அவர் மீண்டும் வாக்கு சேகரிக்க உள்ளார். ஆனால், காங்கிரஸின் முகமாகத் திகழும் ராகுல் காந்தி இதுவரை தமிழகப் பிரச்சாரப் பட்டியலிலேயே இல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க: செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டர்.. கன்னத்தில் அறைந்த விசிக தலைவர் திருமாவளவன்.. அதிர்ச்சி சம்பவம்!
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற ஐயப்பாட்டைப் பல நிகழ்வுகள் உறுதிப்படுத்துவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக முதல்வர் ஸ்டாலினை ‘சகோதரர்’ என்று அழைத்து வந்த ராகுல் காந்தி, இந்த முறை ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தில் ‘தமிழக முதல்வர்’ என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். பதிலுக்கு ஸ்டாலினும் ‘சகோதரர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரி பிரச்சாரம்:
இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரியில் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்த போதிலும், இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கவில்லை. மேலும், தங்களது மேடைப் பேச்சுகளில் ஒருவரது பெயரை மற்றொருவர் குறிப்பிடக் கூடத் தவிர்த்துவிட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கோரியதுடன், ஆட்சியில் பங்கும் கேட்டது இரு கட்சிகளுக்கும் இடையே கசப்பான சூழலை உருவாக்கியதாகப் பேசப்படுகிறது.
தவெகவுடன் காங்கிரஸ் நெருக்கம்:
அதோடு, தமிழகத்தில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கக் காங்கிரஸின் சில தலைவர்கள் ஆர்வம் காட்டியதும் திமுக-வை அதிருப்தி அடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ராகுல் காந்தி தீவிரப் பிரச்சாரத்தில் இருந்ததால் தமிழகம் வரவில்லை என்று கூறப்பட்டது. எனினும், அந்த மாநிலங்களில் தேர்தல் பணிகள் முடிவடைந்த பின்னரும், அவரது தமிழகப் பயணத் திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல்?:
அதேவேளையில், தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் இடங்களில் முதல்வர் ஸ்டாலின் மட்டும் “சகோதரர் ராகுல் காந்தியின் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” என்று தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி குறித்து இதுவரை ராகுல் காந்தி எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது, அவர் தமிழகப் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிக்கிறாரா என்ற விமர்சனத்தை வலுப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தலைமை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர் ஸ்டாலின்..
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்:
திருநெல்வேலியில் பரப்புரை மேற்கொண்ட விஜய், “திமுக கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. டாப் தனியாக, பாட்டம் தனியாக, ரீப்பர் தனியாக ஜாயிண்ட் தனியாக நிற்கிறது. தனித்தனியாக எல்லாமே அப்படியே ஒட்ட வைத்துக் கொண்டு இருக்கிறார். கூட்டணி கட்சிக்காரர்களே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு போட மாட்டார்கள் போல சூழல் இருக்கிறது. சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை திமுக பையில் போட்டுக்கொண்டுள்ளது. ஆனால் உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது” என்று பேசினார்.