ஏப்ரல் 10, 2026: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சரியாக 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவையில் நேற்றைய தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வரக்கூடிய இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து ரோட் ஷோ மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட இருக்கின்றனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி:
குறிப்பாக, பிரதமர் மோடி வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அங்கு ஆறு தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வருகை தந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலுக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் நாகர்கோவில் வேப்பமூடு பகுதிக்கு சென்று, அங்கிருந்து வடசேரி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ரோட் ஷோ மேற்கொள்கிறார்.
மேலும் படிக்க: ‘ஜனநாயகன்’ படம் லீக்.. “உதயநிதியும், எல்.முருகனுமே காரணம்”.. ஆதவ் அர்ஜுனா பகீர் புகார்..
இந்த நிகழ்வில் நாகர்கோவில் தொகுதி எம்.ஆர். காந்தி, விளவங்கோடு தொகுதி விஜயதாரணி, குளச்சல் தொகுதி சிவக்குமார், பத்மநாபபுரம் தொகுதி ரமேஷ், புள்ளையூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நிப்பின் சோமன், கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் ஆகியோருக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, வேப்பமூடு முதல் வடசேரி வரை முழு பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: “நாங்களும் விஜய் ரசிகர்கள்தான்”.. ஆனால் அவர்.. பரபரப்பை கிளப்பிய திமுக அமைச்சர்..
தமிழகம் வரும் ராகுல் காந்தி:
இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார். தனது தந்தை Rajiv Gandhi நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், அங்கு பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செல்வ பெருந்தகைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், தொடர்ந்து பொன்னேரி மற்றும் வேளச்சேரி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரோட் ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான இடங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு வருவதாக காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி:
சென்னை பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட பிறகு, தூத்துக்குடியில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஒரே மேடையில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போட்டியிடும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
இந்த பிரச்சாரத்தை தொடர்ந்து, ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளிலும் மீண்டும் தமிழகத்திற்கு வருவதாகவும், அப்போது பிரியங்கா காந்தி அவருடன் வருவார் எனவும் கட்சி அமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். புறநகர் மற்றும் மாவட்டங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
மொத்தத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.