3 நாள்களில் பாமக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்…அருள் எம்எல்ஏ!
Ramdoss Side PMK Alliance; ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி குறித்து 2 அல்லது 3 நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என்று அந்தக் கட்சியின் எம்எல்ஏ அருள் தெரிவித்தார். மேலும், அன்புமணி குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.
ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டணி குறித்து இன்னும் 2 அல்லது 3 நாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அருள் எம்எல்ஏ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மையான தொண்டர்கள் ராமதாஸ் பக்கமே உள்ளனர். அன்புமணியுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் உறுதியாக ஏமாறுவார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி விவகாரம் தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் தான் முடிவு எடுப்பார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். எனவே, பாட்டாளி மக்கள் கட்சிக்கான வாக்குகள் அனைத்தும் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது. பெற்ற தந்தையை மதிக்காத அன்புமணியை இந்த நாடு மன்னிக்குமா. பல கனவுகளோடு அன்புமணியை மருத்துவராக்கி, மத்திய அமைச்சராக்கி, மக்களவை உறுப்பினராக்கி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக்கி மருத்துவர் ராமதாஸ் அழகு பார்த்தார்.
அன்புமணியை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்
46 ஆண்டுகாலம் பல்வேறு போராட்டங்களை சந்தித்து சிறை சென்று வந்த ராமதாசை ஏமாற்றும் அன்புமணியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சி அங்கீகரிக்கப்படாத நிலையில், அதன் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்ததாக அன்புமணி அறிவித்தது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்.
மேலும் படிக்க: பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் தயார்? எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!




தமிழக மக்களுக்கு அன்புமணி என்ன செய்துள்ளார்
தமிழக மக்களுக்காக அன்புமணி என்ன தியாகம் செய்துள்ளார். எத்தனை முறை சிறை சென்றுள்ளார். என்னென்ன போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் பெருமளவில் உழைக்காத அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவியை ராமதாஸ் பெற்றுக் கொடுத்தார். சேலம் மேற்கு தொகுதி எம். எல். ஏ. வாக நான் இருந்ததில்லை. அந்த தொகுதி மக்களின் அண்ணனாகவும், தம்பியாகவும் இருந்துள்ளேன். இதனால், அந்த தொகுதி மக்கள் என்னை உறுதியாக வெற்றி பெற செய்வார்கள்.
ராமதாஸ் கூறும் நபர் தான் முதல்வராக வருவார்
அன்புமணி வெற்றி பெற்று வந்தால் தமிழக மக்களை ஏமாற்றி வஞ்சிப்பார். பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் நபர் தான் அடுத்த முதல்வராக வருவார். பாட்டாளி மக்கள் கட்சி எந்த கூட்டணிக்கு சென்றாலும் குறைந்தது 35 தொகுதிகள் பெரும் அளவுக்கு வலிமையாக உள்ளது. இந்த வலிமையை குறைக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். 40 தொகுதிகளை தேர்வு செய்து வாக்குச்சாவடி வாரியாக 5 பேர் கொண்ட குழுவை நியமித்து வருகிறோம். இந்த குழுவின் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்…மத்திய உள்துறை அமைச்சகம்-தடயவியல் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!