கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்…மத்திய உள்துறை அமைச்சகம்-தடயவியல் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
Karur Stampede Incident: கரூர் கூட்ட நெரிசல் உயிரழப்பு சம்பவம் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி. பி. ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு மேற்பார்வை செய்து வருகிறது. அதன்படி, கரூரின் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகள் 5 பேர் வேலுச்சாமிபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை ( ஜனவரி 9) ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விஜயின் பிரச்சாரத்திற்காக ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடு செய்தனர்.
உயிரிழந்தவர்களி குடும்பத்தினர்களிடம் விசாரணை
இதைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய தடைய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு….பட்டியலில் மிஸ் ஆன செங்கோட்டையன்!




தமிழக அரசின் ஒரு நபர் விசாரணை ஆணையம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, ஒரு நபர் விசாரணை ஆணையமும் விசாரணை மேற்கொண்டிருந்தது. மேலும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பெயரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தது.
சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும் விஜய்
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகியிருந்தனர். இதேபோல, தவெக தலைவர் விஜய்யும் வரும் ஜனவரி 12- ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.
மேலும் படிக்க: கரூர் வழக்கு… சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய் – வெளியான விவரம்