“இதுதான் எனது 2026 தேர்தல் வாக்குறுதி”.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!
திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளதாக பெருமை கூறிய அவர், முறியடிக்க முடியாத சாதனைகளை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை என்று தெரிவித்தார். மேலும், 40 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளதாக கூறினார்.
திருவள்ளூர், ஜனவரி 09: உங்கள் கனவுகளை திட்டங்களாக உருவாக்குவதே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை திருவள்ளூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேசிய அவர், இன்று மிக மிக முக்கியமான, வரலாற்று சிறப்பு மிக்க நாள். மக்களிடம் கனவுகளை கேட்டு நிறைவேற்ற தொடங்கும் வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்றைய நாள் என்று அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார். அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் தருவதே என்று வாக்குறுதி அளித்தேன். சொன்னதை செய்வதே இந்த ஸ்டாலின் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!
முறியடிக்க முடியாத சாதனைகளை செய்ய வேண்டும்:
தொடர்ந்து, பேசிய அவர், சுயமரியாதைமிக்க சமூகமாக உருவாக உறுதியேற்க வேண்டும் என்றும், மக்களுக்கு தேவை என்று சொன்னால் உடனே செய்து தருகிறோம் எனவும் தெரிவித்தார். 21 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் காலை உணவுத் திட்டம் தேர்தல் வாக்குறுதியா? என்று கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருவதாக கூறினார்.




திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளதாக பெருமை கூறிய அவர், முறியடிக்க முடியாத சாதனைகளை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை என்று தெரிவித்தார். 40 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளதாக கூறிய அவர், பொங்கலை மகிழ்ச்சி பொங்கலாக மாற்ற மக்களுக்கு ரூ.3,000 பரிசு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தன்னார்வலர்களிடம் கனவை சொல்லுங்க:
இன்றிலிருந்து 30 நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள எல்லா குடும்பத்தினரையும் தன்னார்வலர்கள் குழு வந்து சந்திக்கும். இன்னும் 30 நாட்களுக்குள் அந்த குழு உங்களை சந்திக்கும்போது, உங்கள் கனவை அவர்களிடம் தெரிவியுங்கள். அதனை அவர்கள் டிஜிட்டல் வடிவில் பதிவேற்றம் செய்வார்கள். எல்லோருக்குமான ஆட்சி அமைய வேண்டும் என பெரியார், அண்ணா, கலைஞர் கனவு கண்டார். அதனை தான் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தின் மூலம் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்டு, தனித்துவமான தரவுத்தளமாக உருவாக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தீபாவளி, பொங்கல் ஆஃபர் போல்.. ஆஃபர் அறிவித்து காத்திருக்கிறார் விஜய்.. திருமாவளவன் விமர்சனம்!
கனவு அட்டை வழங்குவர்:
தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று படிவம் ஒன்றை வழங்குவார்கள். பின்னர், 2 நாள்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்வர். செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பதிற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.