ஈரான் போர் முடிவுக்கு வந்தால் தங்கம் விலையில் எத்தகைய மாற்றம் நடக்கும்!
Gold Price After Iran War | ஈரான் போர் காரணமாக தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதன் காரணமாக, போர் முடிவுக்கு வந்தால் தங்கம் விலையில் என்ன தாக்கம் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஈரான் (Iran) மற்றும் அமெரிக்கா (America) இடையே பிப்ரவரி 28, 2026 முதல் கடும் போர் நிலவி வருகிறது. ஈரான், அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது என இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஒரு கட்டத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. அதன் விளைவாக உலக நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்திக்க தொடங்கியது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 அமெரிக்க டாலர்கள் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஈரான் போருக்கு பிறகு கடும் உயர்வை சந்தித்து தற்போது ஒரு பேரல் 88 அமெரிக்க டாலர்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் போரால் தொடர் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய்
இவ்வாறு ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் கடும் விலை உயர்வை சந்திக்க தொடங்கியதன் காரணமாக, தங்கம் கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் தங்கம் விலை வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. இதேபோல ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நீடிக்கும்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற நோக்கத்தில் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதுவே, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நிலவும்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறையும் என்பதால் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : டாடா கார் வாங்கப்போறீங்களா? விலை உயர்வை தவிர்க்க உடனே இதை பண்ணுங்க
போர் முடிவுக்கு வந்தால் தங்கம் விலை என்ன ஆகும்?
இதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் தாக்குதல்கள் நடைபெற்று வந்த நிலையில், கச்சா எண்ணெய் உயரும் நிலை உருவானது. இந்த நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் அதன் பக்கம் திரும்பிய நிலையில், தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்தது. அதாவது 2026 தொடக்கத்தில் ரூ.15,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை உறுதியாகி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை குறையும். இதன் காரணமாக முதலீட்டாளர்களின் மொத்த கவனமும் தங்கத்தின் பக்கம் திரும்பும். அதன் விளைவாக தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்திக்கும் நிலை உள்ளது.


