AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.17,356 – இஎம்ஐ, எஸ்ஐபி, ஆர்டி – எதில் அதிக லாபம்?

Best Investment for Wealth : ஒரே தொகையை வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ, மியூச்சுவல் ஃபண்ட் எஸ்பிஐ, ஆர்டி என 3 முறைகளில் மாதந்தோறும் செலுத்தினால் 20 ஆண்டுகளில் எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.17,356 – இஎம்ஐ, எஸ்ஐபி, ஆர்டி – எதில் அதிக லாபம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Oct 2026 17:17 PM IST

மூன்று பேர் ஒவ்வொரு மாதமும் ஒரே தொகையை 20 ஆண்டுகளுக்குச் செலுத்துகின்றனர் என வைத்துக்கொள்வோம். ஒருவர் வீட்டுக் கடனுக்கான (Home Loan) இஎம்ஐ செலுத்துகிறார். இன்னொருவர் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறார். மூன்றாவது நபர் வங்கியில் தொடர் வைப்புத்தொகையில் சேமிக்கிறார். மூவருக்கும் ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி அல்லது வருமானம் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் 20 ஆண்டுகள் முடிவில் எவ்வளவு தொகை இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தில் (AMFI) பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அதித் அஹ்லாவத் விளக்கியுள்ளார். அதன்படி மாதம் ரூ.17,356 என்ற ஒரே தொகையை, 20 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8.5 சதவிகித வட்டி அல்லது வருமானம் என்ற விகிதத்தில் மூன்று வழிகளில் பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

இதையும் படிக்க : Gold Price: நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. சென்னையில் தொடர்ந்து 4 நாட்களாகக் குறையும் தங்கம் விலை! சவரனுக்கு ரூ.600 சரிவு..

1. வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ

ரூ.20 லட்சம் வீட்டுக் கடனை, 8.5 சதவிகித வட்டி என்ற அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு கடன் வாங்கினால், மாதத் தவணை ரூ.17,356 ஆக இருக்கும். 20 ஆண்டுகளில் மொத்தமாகச் செலுத்தும் தொகை ரூ.41.65 லட்சம். இதில் ரூ.21.65 லட்சம் வட்டியாகவே செல்கிறது. அதாவது, வாங்கிய கடனைவிட அதிகமான தொகையை வட்டியாகக் கட்டுகிறோம். கடன் முடியும்போது சொந்தமாக ஒரு வீடு இருக்கும். அதன் மதிப்பு உயர்ந்திருக்கலாம். வீடு என்பது கண்ணுக்குத் தெரியும் சொத்தாக இருந்தாலும், அதன் உண்மையான பலன் ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம், பராமரிப்புச் செலவு போன்றவையும் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

2. மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி

இந்த நிலையில் வீட்டுக் கடனுக்காக நாம் செலுத்தும் அதே இஎம்ஐயை ரூ.17,356 என்ற தொகையை ஒவ்வொரு மாதமும் எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, ஆண்டுக்கு 8.5% வருமானம் கிடைப்பதாகக் கணக்கிட்டால், 20 ஆண்டுகளில் அது சுமார் ரூ.1.09 கோடியாக வளரும். முதலீடு செய்த தொகை அதே ரூ.41.65 லட்சம்தான். ஆனால் வருமானமாக மட்டுமே ரூ.67.16 லட்சம் கிடைக்கும்.

3. தொடர் வைப்புத்தொகை

அதே மாதத் தொகையை, அதே 8.5% வட்டியில் வங்கியின் தொடர் வைப்புத்தொகையில் செலுத்தினால், 20 ஆண்டுகளில் சுமார் ரூ.1.01 கோடி கிடைக்கும். இதில் வட்டி வருமானம் சுமார் ரூ.59.10 லட்சம். இஎம்ஐ வழியைவிட இது அதிகம் என்பதுடன், பாதுகாப்பானதும்கூட. ஆனால் எஸ்ஐபி கணக்கைவிட சுமார் ரூ.8 லட்சம் குறைவு.

இதையும் படிக்க : செயலற்ற வங்கி கணக்கை மீண்டும் செயல்படுத்துவது எப்படி?.. கட்டணம் செலுத்த வேண்டுமா?

இந்தக் கணக்கில் எஸ்ஐபி, ஆர்டி இரண்டுக்கும் ஒரே 8.5% விகிதம்தான் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள சுமார் ரூ.8 லட்சம் வித்தியாசம், வட்டி எத்தனை முறை கூட்டப்படுகிறது என்பதால் ஏற்படுகிறது. எஸ்ஐபி கணக்கில் மாதந்தோறும் கூட்டு வட்டி கணக்கிடப்பட்டுள்ளது. வங்கி ஆர்டி-களில் பொதுவாகக் காலாண்டுக்கு ஒருமுறையே வட்டி கூட்டப்படுகிறது. மேலும், ஆர்டி வட்டி உறுதியானது. ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் வருமானம் சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஏறி இறங்கும். 8.5% என்பது ஒரு அனுமானம் மட்டுமே, உத்தரவாதம் அல்ல. உண்மையான வருமானம் இதைவிட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

(Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. முதலீட்டு முடிவுகளை எடுக்கும் முன், தகுதி வாய்ந்த நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.)

Follow Us