வங்கி கடன் வாங்கியவர்களுக்கு ஷாக்.. மேலும் ரெப்போ வட்டியை உயர்த்த ஆர்பிஐ திட்டம்!
RBI Planning To Hike Repo Rate | இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த நிலையில், மேலும் இரண்டு முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதன் காரணமாக கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) ரெப்போ வட்டி விகிதம் (Repo Interest Rate) குறித்து அறிவிக்கும். அந்த வகையில், அக் டோபர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற நாணய நிதி கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு, 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதாக ஆர்பிஐ அறிவித்தது. இதன் காரணமாக 5.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக வங்கியில் கடன் வாங்கியுள்ளவர்களின் மாத தவணை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வங்கியில் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வட்டி விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரெப்போ வட்டி
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான விகிதம் தான் ரெப்போ வட்டி. இதன் காரணமாக ரெப்போ வட்டி உயரும் போதெல்லாம் வங்கிகள் தங்களின் கடன் திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தும். இதுவே, ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைக்கும்போது வங்கிகள் தங்களது கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும்.
இதையும் படிங்க : Gold Price : தங்கம் விலை ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?.. தற்போதைய நிலவரம் இதுதான்!




இது புதியதாக கடன் வாங்க உள்ளவர்கள் மட்டுமன்றி, ஏற்கனவே கடன் வாங்கியவர்களையும் பாதிக்கும். காரணம், வங்கிகள் ஃப்ளோடிங் முறையில் கடன் வழங்குகின்றன. இந்த முறையில் ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைத்தால் வாடிக்கையாளர்களின் கடன் வட்டி விகிதம் குறையும். இதுவே ஆர்பிஐ வட்டியை உயர்த்தினால் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும்.
கடன் வாங்கியவர்களுக்கு மேலும் சுமை அதிகரிக்கும் சூழல்
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதன் விளைவாக ஃப்ளோடிங் முறையில் கடன் வாங்கியவர்களின் மாத இஎம்ஐ அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான், தொடர்ந்து உயரும் பணவீக்கம் காரணமாக ஆர்பிஐ மேலும் இரண்டு முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஃப்ளோடிங் வட்டி முறையில் கடன் வாங்கியுள்ளவர்களின் மாத தவணை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.