மேயர் பிரியாவை யாரும் புறக்கணிக்கவில்லை.. இணைந்துதான் பணியாற்றுகிறோம்” – அமைச்சர் ராஜ்மோகன்
Minister Rajmohan To Mayor Priya: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், மேயர் பிரியாவை அரசு புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்தார். மாநகராட்சி அலுவலகம் மேயரின் நிர்வாக வரம்புக்குள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அங்கு வருவதற்கு யாருடைய அழைப்பும் தேவையில்லை என்றார்.
அக்சோபர் 24, 2026: மருது பாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரர்கள் என்றும், அவர்களது வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பள்ளிகளில் சாதியப் பிரச்சினைகள்: அமைச்சர் கருத்து
பள்ளிகளில் சாதிய ரீதியான பிரச்சினைகள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், பள்ளிகளில் நடைபெறும் சம்பவங்கள் மாணவர்களைப் பாதிக்கும் என்றும், சாதியப் பாகுபாட்டால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்.. ரூ.392 கோடியில் ‘ஹீரோ சைக்கிள்ஸ்’ நிறுவனத்திற்கு டெண்டர்!!
எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், உடல் வலிமையை மேம்படுத்த உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைப் போல, மாணவர்களின் மன வலிமையை அதிகரிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். ஆசிரியர்களுக்கு உணர்வுகளைக் கையாள்வது தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். மாணவர்களிடையே சாதியப் பிரச்சினைகளைத் தடுப்பது அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
குழந்தைகள் மாயமாவது குறித்து விளக்கம்
தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், காணாமல் போகும் குழந்தைகளை விரைவாக மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
குழந்தைகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களது தந்தை அழைப்பதாகத் தெரிவித்து அழைத்துச் செல்லும் சம்பவங்களும் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். குழந்தைகள் காணாமல் போனதும் நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதுடன், மோப்ப நாய்களைப் பயன்படுத்தியும் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்படுவதாகக் கூறினார்.
மேலும் படிக்க: நெல்லை அருகே பயங்கரம்.. ஊருக்குள் புகுந்து மூன்று பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மர்ம கும்பல்!!
நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புறங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய சம்பவங்களில் நேர்மையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
“மேயர் பிரியாவை யாரும் புறக்கணிக்கவில்லை”
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், மேயர் பிரியாவை அரசு புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்தார். மாநகராட்சி அலுவலகம் மேயரின் நிர்வாக வரம்புக்குள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அங்கு வருவதற்கு யாருடைய அழைப்பும் தேவையில்லை என்றார். மேயர் பிரியா பங்கேற்ற கூட்டங்களில் தானும் அமைச்சர் ஆதவும் இணைந்து இதுகுறித்துப் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சி வேறுபாடும் பார்க்காமல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.