தீபாவளிக்கு கார் – பைக் வாங்கபோறீங்களா? இந்த 6 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
Diwali Vehicle Buying Tips : இந்த தீபாவளி பண்டிகையின் போது புதிய கார் அல்லது பைக் வாங்குவதற்கு முன் பல்வேறு டீலர்ஷிப்களில் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது, காப்பீடு மற்றும் கடன்கள் குறித்து பேரம் பேசுவது, மற்றும் வாகனத்தைப் பெறுவதற்கு முன் முழுமையான பரிசோதனை செய்வதன் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும்.
தீபாவளி சமயத்தில் புதிய கார் அல்லது பைக் (Bike) என புதிய வாகனம் வாங்குவதை பலரும் முக்கியமானதாக கருதுகிறார்கள். இதன் காரணமாக வாடிக்கையாளர்களை ஈர்க்க, வாகன நிறுவனங்களும் டீலர்களும் அதிரடி தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் பிற சலுகைகளை வழங்குகின்றன. இருப்பினும், கவர்ச்சிகரமான விளம்பரங்களை அல்லது ஷோரூம் சலுகைகளை மட்டும் நம்பி அவசரப்பட்டு முடிவெடுப்பது, உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தக்கூடும்.
இந்த பண்டிகைக் காலத்தில் வாகனம் வாங்கத் திட்டமிட்டிருந்தால், சில முக்கிய அம்சங்களைக் கவனிப்பதன் மூலம் கணிசமான தொகையைச் சேமிக்கலாம். வாகனத்தின் விலையைப் பற்றி மட்டும் பேரம் பேசுவது போதாது. காப்பீடு, கடன், கூடுதல் உபகரணங்கள் மற்றும் வாகனத்தைப் பெறுவதற்கு முன்பாக அதை முழுமையாகச் சரிபார்ப்பது ஆகியவை மிகவும் முக்கியம். வாகனம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 6 வழிகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
1. விலை ஒப்பீடு
வாங்குவதற்கு முன்பாக, உங்கள் நகரத்தில் உள்ள குறைந்தது 3 வெவ்வேறு ஷோரூம்களில், அதே மாடல் மற்றும் வேரியண்டிற்கான ஆன் ரோடு விலை விவரங்களைக் கேட்டுப் பெறுங்கள். எந்த டீலர் சிறந்த தள்ளுபடியையும் கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள இது உதவும். பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் டீலர்கள் இருப்பதால், மற்ற ஷோரூம்களில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைச் சுட்டிக்காட்டி, நீங்கள் விரும்பும் டீலரிடம் விலையைக் குறைக்கப் பேரம் பேசலாம். காப்பீட்டிற்கான மாற்று வழிகளை ஆராயுங்கள்.




இதையும் படிக்க : ரூ.250-ல் தொழில் தொடங்கி சாதித்த கேரள தம்பதி.. ரூ.80-90 லட்சம் ஆண்டு வருமானம்!
2. காப்பீடு
புதிய வாகனத்துடன் வழங்கப்படும் காப்பீடு உங்கள் மொத்தச் செலவை அதிகரிக்கக்கூடும். எனவே, டீலர் குறிப்பிடும் பிரீமியம் தொகையை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடாதீர்கள். பாலிசி பஜார் போன்ற ஆன்லைன் காப்பீட்டுத் தளங்களில் கட்டணங்களைச் சரிபாருங்கள். ஒப்பிடும்போது, இன்சூர்டு டிக்ளேர்டு வேல்யூ மற்றும் ஜீரோ டிப்ரிசியேஷன்டஅல்லது ‘என்ஜின் பாதுகாப்பு’ போன்ற கூடுதல் கவர்கள்அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் சரியான ஒப்பீட்டைச் செய்ய முடியும். வெளியில் இருந்து காப்பீட்டு பாலிசியை வாங்குவதன் மூலம், சில சமயங்களில் ₹15,000 முதல் ₹40,000 வரை சேமிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஆன்லைனில் பெற்ற விலைப்புள்ளியை (quote) டீலரிடம் காட்டி, அதைவிடக் குறைவான விலையை வழங்குமாறு கேட்கலாம்.
3. கார் கடனுக்கான வட்டி
நீங்கள் கார் வாங்குவதற்கு கடன் பெறுகிறீர்கள் என்றால், டீலருடன் இணைந்துள்ள வங்கியை மட்டுமே தேர்ந்தெடுக்காதீர்கள். உங்கள் தற்போதைய வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களில் உள்ள வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணங்கள் (processing fees) மற்றும் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில், சில வங்கிகள் செயலாக்கக் கட்டணத்தைக் குறைக்கலாம் அல்லது முற்றிலும் நீக்கலாம். முன்கூட்டியே கடன் ஒப்புதல் பெற்று வைத்திருப்பது கூடுதல் சாதகமாக இருக்கும். உங்கள் CIBIL ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கோரிப் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
4. கூடுதல் செலவு செய்வதைத் தவிர்க்கவும்
டீலர்கள் பெரும்பாலும் விலைப்பட்டியலில் அத்தியாவசிய கிட் அல்லது ஃப்ளோர் மேட்ஸ் மற்றும் மட் ஃபிளாப்புகள் கார் ஃபிரெஷ்னர்ஸ் போன்ற அடிப்படை உபகரணங்களைச் சேர்த்திருப்பார்கள். இதற்கு ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருட்கள் உங்களுக்கு உண்மையிலேயே தேவையா என்று பரிசீலித்து, தேவையில்லாதவற்றை நீக்குமாறு டீலரிடம் கூறுங்கள். ப்ளோர் மேட், சீட் கவர்ஸ் போன்றவற்றை வெளியில் உள்ள கடைகளில் மலிவான விலையில் வாங்க முடியும். இருப்பினும், காரில் ஏதேனும் மாற்றங்களோ அல்லது கூடுதல் இணைப்புகளோ செய்வதற்கு முன்பு, உங்கள் வாகனத்தின் வாரண்டி நிபந்தனைகளைச் சரிபார்க்க மறக்காதீர்கள்.
5. கார்ப்பரேட் தள்ளுபடி
நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் வாகனத்தை விற்கிறீர்கள் என்றால், உங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் நோ-கிளைம் போனஸ் குறித்துக் கேளுங்கள். நீங்கள் இதற்குத் தகுதியுடையவர் என்றால், இந்த போனஸை உங்கள் புதிய காரின் காப்பீட்டு பாலிசிக்கு மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம், வாகனத்தின் சொந்த சேதங்களுக்கான பிரீமியத்தில் 20% முதல் 50% வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், நீங்கள் ஏதேனும் தனியார் நிறுவனம், அரசுத் துறை, ஆயுதப் படைகள் அல்லது கல்வி நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், அங்கு கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இதன் மூலம் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை சேமிக்க முடியும்.
இதையும் படிக்க : Car Loan வாங்க போறீங்களா?.. இவற்றை தெரிந்துக்கொண்டால் பல லட்சம் மிச்சம்.. முழு விவரம்!
6. வாகனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன் அதைச் சரிபார்க்கவும்
பண்டிகைக் காலங்களில் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், டீலர்ஷிப்களில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். எனவே, முழுத் தொகையைச் செலுத்துவதற்கு முன்போ அல்லது பதிவு செய்வதற்கு முன்போ, வாகனத்தை முழுமையாகச் சரிபார்க்கும் டெலிவரிக்கு முந்தைய ஆய்வு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பகல் வெளிச்சத்தில், வாகனத்தின் பாடி மற்றும் கலரை கவனமாகப் பரிசோதித்து, ஏதேனும் டெண்ட்ஸ் அல்லது கீறல்கள் உள்ளனவா என்று சரிபார்க்கவும். மேலும், வாகன அடையாள எண் மூலம் வாகனம் தயாரிக்கப்பட்ட மாதம் மற்றும் ஆண்டைச் சரிபார்க்கவும். ஏதேனும் குறைபாடுகளைக் கண்டறிந்தால், பணம் செலுத்துவதற்கு முன்போ அல்லது வாகனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்போ இது குறித்து விற்பனையாளரிடம் பேசுங்கள்.