பாஸ்டேக் வருடாந்திர பாஸ் என்பது என்ன? கட்டாயமா? முழு விவரம்!
FASTag Annual Pass: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பயணிகளுக்கான வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வருகிற ஆகஸ்ட் 15, 2025 அன்று முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த பாஸை ரூ.3000 செலுத்தி பெறுவதன் மூலம் ஆண்டுக்கு 200 பயணங்கள் வரை கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.

நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் ஒவ்வொரு டோல்கேட்டிலும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது நமது பயண நேரத்தை தாமதப்படுத்தி வந்தது. இந்த நிலையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) ஃபாஸ்டேக் எனும் வசதியை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கியது. இதன் மூலம் ஒவ்வொரு டோல்கேட்டிலும் நின்று கட்டணம் செலுத்த தேவையில்லை. நம் வாகனத்தின் முன் பக்கம் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் மூலம் நேரடியாக பணம் எடுத்துக்கொள்ளப்படும். இது நமது பயணத்தை மிகவும் வசதியாக மாற்றியது. இந்த நிலையில் ஃபாஸ்டேக் (FASTag) பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக அடிக்கடி பயணம் செய்பவர்களுக்காக புதிய சலுகையாக வருடாந்திர பாஸ் (Annual Pass) திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் ரூ.3,000-க்கு ஒரு வருட பாஸ் பெறுவதன் மூலம், பயணிகள் சுமார் ரூ.7,000 வரை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான நிபந்தனைகள், பயன்கள் மற்றும் முக்கிய விளக்கங்களை இந்த கட்டுரையாக பார்க்கலாம்.
ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் என்பது என்ன?
ஃபாஸ்டேக் வருடாந்திர கட்டணம் என்பது கார்களில் அடிக்கடி பயணிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாக கருதப்படுகிறது. இந்த பாஸை வாங்குபவர்கள் ஒவ்வொரு டோல்கேட்டிலும் தனித்தனியாக கட்டணம் செலுத்தவில்லை. மேலும் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் குறைகிறது. இதன் மூலம் ரூ. 3000 செலுத்தி இந்த பாஸை பெறலாம். மேலும் இந்த பாஸை பெறுவதன் மூலம் 200 பயணங்கள் அல்லது 365 நாட்கள், எது முதலில் வருகிறதோ அது வரை பயணிக்கலாம். 365 நாட்களுக்குள் 200 பயணங்கள் செய்துவிட்டால் மீண்டும் பாஸ் பெற வேண்டியிருக்கும். இந்த வருடாந்திர பாஸ் முறை ஆகஸ்ட் 15, 2025 அன்று முதல் நடைமுறைக்கு வரும்.




வருடாந்திர பாஸ் குறித்து நிதின் கட்கரி விளக்கம்
🛣️ FASTag Annual Pass Scheme – FAQS#FASTagBasedAnnualPass #FAQS #PragatiKaHighway #FASTagUpdate #FASTag pic.twitter.com/C5cKdSpUTa
— Office Of Nitin Gadkari (@OfficeOfNG) June 19, 2025
வருடாந்திர பாஸை எப்படி பெறுவது?
இந்த வருடாந்திர பாஸை ராஜ்மர்க் யாத்ரா (Rajmarg Yatra) என்ற செயலியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) தளத்தில் இருந்து பெறலாம். குறிப்பாக ராஜ்மர்க் யாத்ரா செயலியில் லாகின் செய்து ஃபாஸ்டேக் என்பதை கிளிக் செய்து உங்கள் விவரங்களை உள்ளிடவம். பின் ஆன்லைன் வழியாக ரூ.3000 செலுத்தி இந்த பாஸை பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே பயன்படுத்தும் பாஸ்டேக் மூலம் இதனை பயன்படுத்தலாம். அதற்கு முன் நமது பாஸ்டேக் செயல்பாட்டில் உள்ளதா என்பதையும் ஒரு முறை தெரிந்துகொள்வது அவசியம்.
ஒரு பயணம் என்பதற்கான வரையறை என்ன?
சாதாரணமாக ஒரு டோல்கேட்டை ஒவ்வொரு கடப்பதும்ஒரு பயணமாக கணிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு டோல்கேட்டை கடந்து செல்லும்போது ஒரு பயணமாக கருதப்படும். அதே வழியில் திரும்பி வரும்போது அது மற்றொரு பயணமாக கருதப்படும். மேலும் டோல்களில் நுழைவுப்புள்ளி மற்றும் வெளியேறும் புள்ளி ஆகியவற்றை கடந்து செல்லும்போது ஒரு பயணமாக கருதப்படும்.
மேலும் உங்கள் ஃபாஸ்டேக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக, வருடாந்திர பாஸ் பற்றிய அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வரும். இது உங்கள் பயணத்தையும், செலவுகளையும் கண்காணிக்க உதவுகிறது. ஒரு வருடத்திற்குள் நீங்கள் 200 பயணங்களை முடித்துவிட்டால், உடனடியாக புதிய Annual Pass ஒன்றை வாங்கலாம். இது தொடர்ச்சியான பயணங்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க உதவுகிறது.
வருடாந்திர பாஸ் கட்டாயமா?
வருடாந்திர பாஸ் என்பது விருப்பத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு இது தேவையில்லை என நினைத்தால், வழக்கமாகப் போல் ஃபாஸ்டேக் மூலம் பயணம் செய்யும் போது மட்டும் டோல் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். ஒரு பயணம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.