17 முறை தோல்வி – தற்போது ரூ.40,000 கோடி நிறுவனத்தின் தலைவர் – ஷேர்சாட் நிறுவனரின் வெற்றிக்கதை!
ShareChat Founder Success Story : ஒரு சில தோல்விகளையே சிலரால் சமாளிக்க முடியாது. ஆனால் ஒருவர் தொடர்ச்சியாக17வது முறையாக தோற்ற பிறகும், துவண்டு விடாமல் 18வது முறையாக முயற்சித்து தொழில் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் தான் ஷேர் சாட் நிறுவனர் அங்குஷ் சச்தேவா.

நாமெல்லாம் ஒரு தோல்வி என்றாலே வாழ்க்கையே முடிந்து விட்டது போல முடங்கி விடுவோம். ஆனால் ஒருவர் ஒன்றல்ல இரண்டல்ல 17 முறை தோற்றும், 18வது முறையாக முயற்சித்து வென்றிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை. இந்தியாவின் பிரபல சமூக வலைதளங்களில் (Social Media) ஒன்றான ஷேர் சாட் செயலி நிறுவனர் அங்குஷ் சச்தேவா. இன்று ஷேர்சாட் (Sharechat) ரூ.40,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட நிறுவனமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது எளிதில் நடந்துவிடவில்லை. தொடர் தோல்வியினால் அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் நம்பிக்கையற்ற வார்த்தைகளை சொன்னபோதும் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் இந்த வெற்றியை அவர் அடைந்திருக்கிறார். இந்தியர்களாலும் தொழில்நுட்ப உலகில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கைய அவர் இளைஞர்கள் மனதில் விதைத்திருக்கிறார். அங்குஷ் சச்தேவா வென்ற கதையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
17 ஸ்டார்ட்அப் தோல்விகள்
பொதுவாக பலரும் ஐஐடியில் படித்து பெரிய நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்ற கனவுடன் நுழைவார்கள். ஆனால் அங்குஷ் அதற்கு விதிவிலக்கு. தொழிலில் சாதிக்க வேண்டும்என்ற கனவுடன் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஐஐடியில் கணினி அறிவியல் பிரிவில் பிடெக் சேர்ந்திருக்கிறார். கல்லூரியில் திறமையான மாணவராக இருந்த அங்குஷ், தனது தொழிற்கனவு குறித்து நண்பர்களுடன் விவாதித்த வண்ணம் இருந்திருக்கிறார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.
இதையும் படிக்க : மெரினாவில் டீ , சமோசா விற்றவர்… இன்று 14 ஹோட்டல்களின் உரிமையாளர் – யார் இந்த பாட்ரிசியா நாராயண்?




கல்லூரி முடித்த பிறகு தொழில் செய்ய பல முயற்சிகளை எடுத்திருக்கிறார். சில தொழில்கள் ஆரம்பத்திலேயே சவாலாக இருந்திருக்கிறது. சில தொழில்கள் வெற்றிகரமாக தொடங்கிய போதும் ஒரு கட்டத்துக்கு மேல் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல 17 முறை தோற்றிருக்கிறார். ஆனால் அவற்றை அவர் தோல்வியாக நினைத்து துவண்டுவிடவில்லை. அவற்றை பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
ஷேர்சாட் உருவான கதை
இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு, தன்னுடன் ஐஐடியில் படித்தநண்பர்கள் பாரித் அஹ்சன் மற்றும் பானு சிங் ஆகியோருடன் இணைந்து ‘ஷேர்சாட்’ (ShareChat) என்ற சமூக வலைத்தளத்தை உருவாக்கினார். இந்தியாவில் உள்ள மொழி வேற்றுமைகளை புரிந்துகொண்ட அவர், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என 15 இந்திய மொழிகளில் உள்ளடக்கங்களை வழங்கும் வகையில் வடிவமைத்தார். இது இந்தியாவின் சிறிய நகரங்கள், கிராமப்புற பயனர்களுக்கு சமூக வலைதளமான ஷேர் சாட் எளிதில் சென்றடைந்தது. விரைவிலேயே கோடி கணக்கான மக்கள் ஷேர்சாட் பயன்படுத்த தொடங்கினர்.
இதையும் படிக்க : 12 வயதில் திருமணம்… தற்கொலை முயற்சி – துன்பங்களைக் கடந்து தொழிலில் சாதித்த கல்பனா சரோஜ்!
அங்குஷ் சச்தேவாவும் அவரது நண்பர்களும் சரியான திட்டமிடலுடன் கடினமாக உழைத்தனர். விரைவிலேயே அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைத்தது. எகனாமிக் டைம்ஸ் இணையதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆம்டு ஜூன் மாதத்தில் சேர் ஷாட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.40,000 கோடி என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் வளர்ந்து வரும் டெக் நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.
தொடர் தோல்விகளால் துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து இந்த உயரத்தை அங்குஷ் சச்தேவா அடைந்திருக்கிறார். தோல்விகளை கண்டு அஞ்சாமல் சரியான திட்டமிடலுடன் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார்.