Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாதத் தவணை திட்டம் – நிறைவேறிய எளிய குடும்பங்களின் கனவுகள் – வசந்தகுமாரின் வெற்றிக்தை

EMI Revolution Pioneer : வசந்த் அண்ட் கோ நிறுவனர் வசந்தகுமார், எளிய மக்களின் நிலையை உணர்ந்து மாதத் தவணை முறையை அறிமுகப்படுத்தினார். அவரது தனித்துவமான அனுகுமுறை காரணமாக அவரது நிறுவனம் அசூர வளர்ச்சியடைந்தது. வசந்தகுமாரின் வெற்றிபெற்றது எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதத் தவணை திட்டம் – நிறைவேறிய எளிய குடும்பங்களின் கனவுகள் – வசந்தகுமாரின் வெற்றிக்தை
வசந்தகுமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Aug 2025 15:26 PM

ஒரு காலத்தில் நண்பர்களிடம் இருந்து ரூ.8000 கடன் பெற்று துவங்கப்பட்ட  நிறுவனம் இன்று ரூ.1000 கோடி மதிப்புடைய வணிக சாம்பிராஜியமாக வளர்ந்து நிற்கிறது. அது தான் வசந்த் அண்ட் கோ (Vasanth And Co) நிறுவனர். ஹெச்.வசந்தகுமாரின் வெற்றிக் கதை.  கன்னியாகுமரி (Kanniyakumari) மாவட்டம் அகத்தீஸ்வரம் என்ற சிற்றூரில் கடந்த 1950 ஆம் ஆண்டு பிறந்தவர் ஹெச்.வசந்தகுமார். எம்.ஏ.தமிழ் இலக்கியம் படித்த அவர், தனது சகோதரர் குமரி ஆனந்தனுக்கு உதவ சென்னை வந்தார். பின்னர் விஜிபி நிறுவனத்தில் ரூ.70 வருமானத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு எளிய மக்கள் அதிக விலை கொடுத்து எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பதை பார்த்திருக்கிறார். அது தான் வசந்த் அண்ட்கோவின் துவக்க புள்ளி.

வசந்த் அண்ட் கோவின் துவக்கம்

கடந்த 1978 ஆம் ஆண்டு ரூ.8,000 கடன் வாங்கி சென்னை தி.நகரில் ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து வசந்த் அண்ட் கோவை தொடங்கினார். முதலில் கயிறு நாற்காலி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய துவங்கினார். அவரது அனுகுமுறையும், வியாபார நுணுக்கத்தின் காரணமாக வியாபாரம் மெல்ல வளரத் துவங்கியது.

இதையும் படிக்க : மக்களின் பிரச்னையை பார்த்தவருக்கு கிடைத்த ஐடியா – ரூ.15 கோடி ஆண்டு வருமானம்… சிவம் தியாகி வென்றது எப்படி?

மாதத் தவணை முறையின் முன்னோடி

இன்று மக்களிடையே பிரபலமாக இருக்கும் இஎம்ஐ (EMI) திட்டத்துக்கு முன்னோடியாக வாடிக்கையாளர்களுக்கு மாதத் தவணை செலுத்தி பொருட்கள் வாங்கிக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தினார். பெரிய தொகையை கொடுத்து பொருட்கள் வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. பொருட்கள் வாங்கும் குறைந்த முன் பணத்தை செலுத்தி, வாங்கிக்கொள்ளலாம். பிறகு மாத மாதம் தங்களால் இயன்றளவு தொகையை செலுத்தி பொருட்களை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இதனால் எளிய, நடுத்தர குடும்பத்தினரும் டிவி, மிக்ஸி போன்ற பொருட்களை வாங்க முடிந்தது. இதன் காரணமாக அவரது புகழும் மதிப்பும் பெருகியது.

வசந்தகுமாரின் விளம்பர யுக்தி

மற்ற நிறுவனங்களைப் போல விளம்பரங்களுக்கு பிரபலமான நடிகர்களைப் பயன்படுத்தாமல்,  வசந்தகுமாரே தனக்கே உரிய சிறு புன்னகையுடன் விளம்பரங்களில் தோன்றினார். இதனால் விளம்பரங்களில் நிறுவனரை நேரில் பார்க்கும்போது அந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை அதிகரித்தது.  இது வசந்த் அண்ட் கோவிற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இதையும் படிக்க : மாதம் ரூ.6,500 சம்பளம்… இன்று ரூ.150 கோடி நிறுவனத்தின் உரிமையாளர் – ரிஸ்க் எடுத்தவருக்கு கிடைத்த வெற்றி!

கிரிக்கெட் மற்றும் சினிமா மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மக்களிடையே டிவி வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட வசந்தகுமார் டிவிக்களையும் தவணை முறையில் விற்பனை செய்யத் துவங்கினார். அது வசந்த் அண்ட் கோவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

மேலும் பொருட்களை விற்றதோடு தனது கடமை முடிந்து விட்டதாக கருதாமல், வாடிக்கையாளர் குறைகளை தீர்ப்பதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தை உருவாக்கினார். மேலும் வசந்த் அண்ட் கோ இல்லாத நகரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கினார். அவரது வியாபார யுக்தியைத் தான் இன்று பல கார்பரேட் நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன.  மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு வழக்கமான முறையில் இருந்து விலகி தனித்துவமாக யோசித்தால் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டமுடியும்  என்பதற்கு வசந்தகுமார் மிகச்சிறந்த உதாரணம்.