தொழிற் கனவு… படிப்பை பாதியில் விட்ட இளைஞருக்கு அடித்த ஜாக்பாட் – ஓயோ நிறுவனரின் வெற்றிப் பயணம்
From Dropout to Billionaire : வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ரித்தேஷ் அகர்வால். ஓயோ நிறுவனத்தின் தலைவர். தொழில் ஆர்வம் காரணமாக, பெற்றோரின் எதிர்ப்பை மீறி கல்லூரி படிப்பை விட்டர், இன்று கோடிக்கணக்கான சொத்து மதிப்பு கொண்ட நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஒடிசா (Odisha) மாநிலத்தில் உள்ள ராயகடா என்னும் சிறிய ஊரில் பிறந்த ரிதேஷ் அகர்வால், ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். ஆனால் சிறு வயதிலேயே தொழில்முனைவோராக மாற வேண்டும் என்ற தீவிரமான ஆர்வம் அவருக்குள் இருந்தது. கோட்டாவில் கல்வி பயின்றபோது, பல நேரங்களில் கல்லூரிக்கு போகாமல் டெல்லியில் (Delhi) உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தார். மாணவர்கள் படிப்பு குறித்து பெற்றோர்கள் தொடர்ந்து கவனிப்பார்கள். ஆனால் ரிதேஷ் கல்லூரிக்கே செல்வதில்லை என்பதைக் கூட அவரது பெற்றோர் அறியாமல் இருந்தனர். தனது 18 வயதில் தொழில் ஆர்வத்தில் டெல்லியில் சிறிய இடங்களில் தங்கி, ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக தனது ஐடியா குறித்து பேசியிருக்கிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டில், ஒரவல் ஸ்டேய்ஸ் (Oravel Stays) என்ற பெயரில் அவர் தொடங்கிய முதல் முயற்சி ஒரு ஸ்டார்ட்அப். குறைந்த செலவில் தரமான தங்கும் இடங்களை பட்டியலிட்டு, பதிவு செய்யும் வகையில் இருந்தது. பின்னர் இது தான் ஓயோ ரூம்ஸ் (OYO Rooms) ஆக வளர்ந்தது.
குடும்பத்தின் எதிர்ப்பு
ஒருநாள் அவர் டெல்லியில் வேலை பார்த்தபோது, அவர் படித்த கல்லூரிக்கு அவரது தந்தை சர்ப்ரைஸ் அளிக்க நினைத்தார். ஆனால் கல்லூரியின் டீன் அவரிடம், ரிதேஷ் கல்லூரிக்கே வருவதில்லை என்ற உண்மையை சொல்லி சர்ப்ரைஸ் அளித்திருக்கிறார். அதன்பின் அவர் ரிதேஷை அழைத்தபோது, ரிதேஷ் தான் அலுவலகத்தில் வேலையில் இருப்பதாக மேலும் அதிர்ச்சியளித்திருக்கிறார். இதனைக் கேட்ட ரிதேஷின் தந்தை அவரது முயற்சிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை கல்லூரி படிப்பில் கவனம் செலுத்த சொல்லியிருக்கிறார். அவரின் தாயை தவிர அனைவரும் அவருக்கு எதிராகவே இருந்திருக்கின்றனர்.




பீட்டர் தியல் பவுண்டேஷனில் வாய்ப்பு பெற்ற முதல் ஆசியர்
கல்லூரியில் இருந்து வெளியேறுவது, திட்டமில்லாத முடிவாக இருந்தாலும், அதுவே அவருக்கு ஒரு பீட்டர் தியல் பவுண்டேஷனில் இடம் பெறும் வாய்ப்பைத் தந்தது. அந்த ஃபெல்லோஷிப் மூலம், 1 லட்சம் டாலர் உதவித் தொகையுடன் உலகம் முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு பெற்ற முதல் ஆசியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் தான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அவர் உலக நாடுகளில் தங்கிய இடங்களை கவனித்து அதனை தனது தொழிலுக்கு பயன்படுத்த நினைத்தார்.
பின்னர் இரவு, பகல் பாராமல் உழைத்தார். நாடு முழுவதும் ஓயோ ஹோட்டல்கள் பெருகின. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ஒரு நாள் ஒரு தெருவில் நிறைய ஓயோ ஹோட்டல்களைப் பார்த்தேன். அங்க குடும்பங்களும் நண்பர்களும் விடுமுறையைக் கழித்தார்கள். என் வாழ்க்கை முடிவடைந்தது போல இருந்தது என்கிறார்.