5 கிலோ மினி சிலிண்டர்களின் விலை உயர்வு – எவ்வளவு தெரியுமா?
Mini LPG Cylinder Price Hike: நாடு முழுவதும் 5 கிலோ எடை கொண்ட மினி சிலிண்டர்களின் விலை ரூ. 51 வரை உயர்ந்துள்ளது. தற்போது பெருநகரங்களில் 5 கிலோ மினி சிலிண்டர்கள் தற்போது ரூ.470 முதல் ரூ.500 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 5 கிலோ மினி எல்பிஜி சிலிண்டர்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள், குறிப்பாக மினி சிலிண்டர்களை அதிகம் பயன்படுத்தும் வெளியூரில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பேச்சிலர் இளைஞர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வந்த இந்த விலை உயர்வின் காரணமாக, 5 கிலோ எடை கொண்ட ஒரு மினி சிலிண்டரின் விலை சுமார் ரூ.51 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ மினி சிலிண்டர்களின் விலை உயர்வு
பெரு நகரங்களில் முன்பு ரூ.420 முதல் ரூ.450 வரை விற்கப்பட்ட 5 கிலோ மினி சிலிண்டர்கள் தற்போது ரூ.470 முதல் ரூ.500 வரை உயர்ந்துள்ளன. வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் குறைந்த வருமானம் கொண்டவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் இந்த மினி சிலிண்டர்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த விலை உயர்வு அவர்களின் மாத பட்ஜெட்டில் நேரடியாக எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… எவ்வளவு தெரியுமா?
பெரும்பாலான மக்கள் இது குறித்து தங்கள் வருதத்தை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக ரூ.51 விலை உயர்வு சிறியதாக தோன்றினாலும், தினசரி வேலை செய்யும் பணியாளர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வீட்டு வாடகை, உணவு பொருட்கள், போக்குவரத்து செலவுகள் அனைத்தும் அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாக மாறும் என பலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
மேற்கு ஆசிய பகுதிகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக, ஹார்முஸ் கடல் பாதை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்களுக்கு அச்சுறுத்தல்கள் நிலவி வருவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விமான எரிபொருள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை முதன்முறையாக ஒரு கிலோலிட்டருக்கு ரூ.2 லட்சம் வரை விலை உயர்ந்துள்ளது. மேலும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவும், சர்வதேச சந்தை மாற்றங்களும் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : நாடு முழுவதும் இன்று முதல் E20 பெட்ரோல் விற்பனை தொடக்கம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு
மொத்தத்தில், மினி எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு, ஏற்கனவே அதிகரித்து வரும் அன்றாட செலவுகளில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இதனால் வெளியூரில் தங்கி படிக்கும் மற்றும் வேலை பார்ப்பவர்கள் இந்த விலை ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுவர். ஏற்கனவே ஹோட்டல்கள் வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.