வீடுகளில் 8 மணி நேரம் வரை ஏசியை பயன்படுத்துகிறீர்களா? மின் கட்டணம் எவ்வளவு இருக்கும்?
AC Electricity Cost : கோடைகாலம் துவங்கியிருக்கும் நிலையில் மக்கள் வெப்பத்தை எதிர்கொள்ள முடியாமல் 8 முதல் 10 மணி நேரம் வரை ஏசியை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் ஏசியை பயன்படுத்துவதன் காரணமாக நம் வீட்டின் மின் கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல வீடுகளில் ஏசி பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பலரும் வீடுகளில் நாள் முழுவதும் ஏசி பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக 1.5 டன் ஏசி பயன்படுத்தும் நபர்கள், அது மாதாந்திர மின்சார கட்டணத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இப்படி அதிக நேரம் ஏசி பயன்படுத்துவது, மின் செலவையும் அதிகரிக்கும் என்பதால், அதன் பயன்பாடு மற்றும் திறனைப் பொருத்தே உங்கள் பில் மாறும். அது உங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக, 1.5 டன் 3 ஸ்டார் ஏசி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.5 முதல் 1.7 யூனிட் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். இதனையடுத்து ஒரு வீட்டில் தினமும் 10 மணி நேரம் ஏசியை பயன்படுத்தினால், சுமார் 17 யூனிட்கள் மின்சாரம் செலவாகும். இதை மாதத்திற்கு கணக்கிட்டால், 510 யூனிட்கள் வரை ஆகும். ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8 என எடுத்துக் கொண்டால், மாதாந்திர மின்சார கட்டணம் சுமார் ரூ.4,000க்கு மேல் செல்லும். அதாவது, கோடை காலத்தில் ஏசியை அதிகமாக பயன்படுத்தினால், உங்கள் மின்சார பில் கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்க : உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க இந்த சில விஷயங்களை பண்ணுங்க!




மாறாக, 1.5 டன் 5 ஸ்டார் ஏசி அதிக திறன் கொண்டதாக இருக்கும். இது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.2 யூனிட் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தும். தினமும் 8 மணி நேரம் பயன்படுத்தினால், 9.6 யூனிட்கள் மற்றும் மாதத்திற்கு சுமார் 288 யூனிட்கள் ஆகும். இதனால் மாதத்திற்கு சுமார் ரூ.2,300 அளவுக்கு மட்டுமே செலவாகும். இது 3 ஸ்டார் ஏசியை ஒப்பிடும்போது 40 முதல் 45 சதவிகிதம் வரை மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும். இதனால் நமக்கு மாத இறுதியில் பட்ஜெட்டில் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
ஏசியின் ஸ்டார் ரேட்டிங் மிகவும் முக்கியமானது. அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிகள் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும், இதனால் மாதம் உங்கள் மின் கட்டணம் குறைவாகவே வரும். குறிப்பாக 5 ஸ்டார் ஏசி விலை சற்றே அதிகமாக இருந்தாலும், அதன் மூலம் நீண்ட காலத்தில் செலவை குறைக்க முடியும்.
இதையும் படிக்க : Honda SP 125 vs Bajaj Pulsar 125: தினசரி அலுவலகப் பயணத்திற்கு எந்த பைக் மிகச்சிறந்த தேர்வு?
மேலும், ஏசி பயன்படுத்தும்போது சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் மின்சார செலவை குறைக்க முடியும். 24 முதல் 26 டிகிரி வரை வெப்பநிலையை அமைப்பது, இன்வெர்டர் ஏசி பயன்படுத்துவது, ஏசி பயன்படுத்தும்போது நம் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடியிருப்பது, ஃபில்டரை அடிக்கடி சுத்தம் செய்வது போன்றவை மின்சார சேமிப்புக்கு உதவும்.
மொத்தத்தில், 1.5 டன் ஏசி பயன்படுத்தும் போது உங்கள் மின்சார கட்டணம் அதன் ஸ்டார் ரேட்டிங், பயன்படுத்தும் நேரம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே மாறும். ஏசியை சரியான முறையில் தேர்ந்தெடுப்பது, முறையாக பயன்படுத்துவது, ஆகியவை குறைந்த செலவில் கோடைகாலத்தை சமாளிக்க முடியும்.