வீடும் கூலாக இருக்க வேண்டும்… மின் கட்டணமும் குறைய வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
AC Saving Tips : இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஏசி பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் வீட்டை குளிராக வைத்திருக்கவும், மின் கட்டணத்தை அதிகரிக்காமல் பயன்படுத்தவும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

Ac Saving Tips
கடந்த ஆண்டுகளை விட இந்த 2026 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்ப கடந்த மார்ச், 2026 முதலே வெப்பத்தின் தாக்கம் நாட்டில் எதிரொலிக்க துவங்கியுள்ளது. இப்போதே அக்னி நட்சத்திரம் போல வெக்கை மக்களை வாட்டுகிறது. இந்த நிலையில், வீட்டுக்குள் நுழைந்தாலும் வெப்பம் குறையாத சூழல் நிலவுகிறது. இதனால் நாள் முழுவதும் ஏசி பயன்படுத்தும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனால் மின் கட்டணமும் உயர்ந்து வருகிறது. ஆனால், சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், வீட்டை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும், மின் கட்டணத்தை குறைக்கவும் முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த 9 வழிகளில் ஏசியை பயன்படுத்தலாம்
முதலில், ஏசியை மிகவும் குறைந்த வெப்பநிலையில் வைத்தால் தான் அறை விரைவில் குளிர்ச்சியடையும் என்பது தவறான கருத்து என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே 24 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வைத்தால் தான் சரியான குளிர்ச்சி கிடைக்கும். அது மட்டுமல்லாமல் மின்சாரமும் குறைவாக செலவாகும். இதேபோல், ஏசி ஓடும் போது பேன் பயன்படுத்துவது குளிர்ந்த காற்றை அறை முழுவதும் விரைவில் சென்றடைய உதவும். இதனால் நீண்ட நேரம் ஏசி பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.
இதையும் படிக்க : வீடுகளில் 8 மணி நேரம் வரை ஏசியை பயன்படுத்துகிறீர்களா? மின் கட்டணம் எவ்வளவு இருக்கும்?
- ஏசியை முறையாக பயன்படுத்த வில்லை என்றாலும், அது அதிக மின்சாரத்தை பயன்படுத்தும். தூசி படிந்த ஃபில்டர்கள் மற்றும் கோயில்களை சுத்தம் செய்வது, ரெஃப்ரிஜரன்ட் அளவை சரிபார்ப்பது போன்றவை முக்கியம். எனவே கோடைக்காலத்திற்கு முன் சர்வீஸ் செய்வது நல்லது.
- வீட்டுக்குள் வெப்பம் செல்லாமல் தடுப்பதும் மிக முக்கியம். ஜன்னல்களுக்கு திரைகளிட்டு மூடி வைக்கலாம். மேலும் ஜன்னலில் ரெஃபிளக்டிவ் ஃபிலிம் பயன்படுத்தினால் சூரிய ஒளி நேரடியாக உள்ளே வராமல் தடுக்கலாம். ஏசி பயன்படுத்தும் போது கதவு மற்றும் ஜன்னல்களின் இடைவெளி இல்லாமல் மூடுவதால் குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்கும். இதனால் ஏசியின் பயன்பாடும் குறையும்.
- புதிய ஏசிகளில் உள்ள ஸ்லீப் மோடு, எகோ மோடு, டைமர் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்துவது மின் கட்டணத்தை குறைக்க உதவும். குறிப்பாக இரவில் ஸ்லீப் மோடு பயன்படுத்தினால், தேவையான நேரம் மட்டும் ஏசி இயங்கும். இதனால் கூடுதல் மின்சார பயன்பாடு குறையும்.
- மேலும், வீட்டில் பயன்படுத்தப்படும மற்ற சாதனங்களாலும் வெப்பம் அதிகரிக்கலாம். குறிப்பாக அடுப்பு, இரும்பு, பழைய விளக்குகள் போன்றவற்றை வீட்டின் வெப்பநிலைய அதிகரிக்கலாம். குறிப்பாக வீடுகளில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவது சிறந்தது. தேவையில்லாத மின்சாதனங்களை அணைப்பதும் முக்கியம்.
இதையும் படிக்க : வீட்டில் இந்த பிரச்னை இருக்கா? உங்கள் WiFi Router மாற்ற வேண்டிய நேரம் இதுதான்
- பழைய ஏசிகளை விட, இன்வெர்டர் தொழில்நுட்பம் அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட புதிய ஏசிகள் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும். இதனால் நீண்ட காலத்துக்கு ஏசியை பயன்படுத்தும் அதிக சேமிப்பை வழங்கும்.
- அதேபோல், ஏசியை தொடர்ந்து ஓடவிடாமல், காலநிலைக்கு ஏற்ப பயன்படுத்துவது நல்லது. காலை மற்றும் மாலை நேரங்களில் காற்றோட்டம் இருக்கும் என்பதால் ஏசி பயன்படுத்தாமல் தவிர்க்கலாம். மதிய நேரங்களில் முன்பாகவே ஏசியை பயன்படுத்தினால் ஏசியின் வேலை நேரம் குறையும். .
- மேலும் நம் வீடுகளில் செய்யும் சில மாற்றங்களும் பெரிய பலனை அளிக்கும். ஜன்னலுக்கு அருகில் செடிகள் வைப்பது, தடிமனான திரைகள் பயன்படுத்துவது போன்றவை வீட்டுக்குள் வெப்ப நிலையை குறைக்க உதவும். மொத்தத்தில், சில சின்ன சின்ன பழக்கங்களை மாற்றினால், இந்த கோடையில் குளிர்ச்சியான சூழலையும், குறைந்த மின்சார கட்டணத்தையும் ஒரே நேரத்தில் பெற முடியும்.