Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mayiladuthurai: காதலை கைவிட மறுத்த இளைஞர்.. கொலை செய்த பெண்ணின் குடும்பத்தினர்?

Mayiladuthurai Honor Killing: மயிலாடுதுறை மாவட்ட்டத்தில் உள்ள அடியமங்கலத்தைச் சேர்ந்த வைரமுத்து, மாலினியை காதலித்ததால், மாலினியின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாதி வேறுபாட்டால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாலினியின் குடும்பத்தினர், வைரமுத்துவை மிரட்டியதற்கான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mayiladuthurai: காதலை கைவிட மறுத்த இளைஞர்.. கொலை செய்த பெண்ணின் குடும்பத்தினர்?
கொலை செய்யப்பட்ட வைரமுத்து
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 17 Sep 2025 06:42 AM IST

மயிலாடுதுறை, செப்டம்பர் 17: மயிலாடுதுறை மாவட்டத்தில் தனது மகளை காதலித்ததால் இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து என்ற மகன் உள்ளார். இவர் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில் அதே கிராமம் அருகே இருக்கும் பெரிய குளம் பகுதியைச் சேர்ந்த மாலினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த பெண் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக வைரமுத்துவும் மாலினியும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதல் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இதில் மாலியின் மாலினியின் குடும்பத்தினர் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

வைரமுத்து, மாலினி இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாலினியின் தாய் விஜயா மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். தன் மகளை தன்னுடைய சமூகத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைத்ததால் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் அதே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இளைஞரை மிரட்டிய பெண்ணின் குடும்பம்

இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயாரான விஜயா வைரமுத்து வேலை செய்யும் பைக் மெக்கானிக் கடைக்கு சென்று அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது மகளுடன் காதலை கைவிட வேண்டும் எனவும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார் அவர் வைரமுத்துவை மிரட்டும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  இதனை தொடர்ந்து மாலினியின் குடும்பத்தினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வைரமுத்து மீது புகார் அளித்தனர்.

Also Read: முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!

அதன் அடிப்படையில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது மாலினி தான் வைரமுத்துவை திருமணம் செய்து கொண்டு வாழ விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாலினியின் குடும்பத்தினர் தங்கள் மகள் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். தொடர்ந்து காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த அந்த பெண் நேராக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு வைரமுத்துவின் பெற்றோர் இருவருக்கும் விரைவில் பதிவு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதனால் வைரமுத்துவின் வீட்டிலேயே மாலினி சில நாட்கள் தங்கி இருந்தார் அதன் பின்னர் தனது வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவர் புறப்பட்ட சில மணி நேரங்களில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த வைரமுத்துவை  அடையாளம் தெரியாத கும்பல்  வழிமறித்து ஓட ஓட விரட்டி கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

Also Read: தந்தை கண்முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெண்.. மார்க்கெட்டில் இளைஞர் செய்த வெறிச்செயல்!

உயிருக்கு போராடிய வைரமுத்துவை கிராம மக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த கொடூர சம்பவம் பற்றி தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு  விசாரணை மேற்கொண்டார். மேலும் அடியமங்கலம் கிராமத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வைரமுத்து உயிரிழப்புக்கு மாலினியின் குடும்பத்தினரே காரணம் எனக் கூறி அவரது குடும்பத்தினர் மிரட்டிய வீடியோக்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.