திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை: முக்கிய குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்..!
West Bengal youth arrested: திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்குவங்காளத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சிறுமி அவர் குற்றவாளி என அடையாளம் கூறியதைத் தொடர்ந்து, போலீசாரிடம் இளைஞர் வன்கொடுமையை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவள்ளூர் ஜூலை 26: திருவள்ளூர் மாவட்டத்தில் (Tiruvallur district) 8 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. குற்றவாளியை கைது செய்ய 20க்கும் மேற்பட்ட போலீசார் 14 நாட்கள் தீவிர தேடல் நடத்தியனர். கஞ்சா பழக்கமுள்ள மேற்குவங்காளத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் (A 30-year-old man from West Bengal) ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். சிறுமி நேரில் அடையாளம் காட்டி அவர் குற்றவாளி என உறுதிப்படுத்தினார். விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது, போக்சோவுடன் BNS 118, 351, 97 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 வயது சிறுமி வன்கொடுமை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரைபேட்டை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 2025 ஜூலை 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, ஒரு இளைஞர் வாயை பொத்தி மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வெகுமதிக்கான அறிவிப்பு; தீவிர விசாரணை
குற்றவாளியை கைது செய்யும் பணியில் 20க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 14 நாட்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் பொதுமக்களிடம் பகிரப்பட்டு, தகவல் அளித்தால் ₹5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.




குற்றவாளியின் கைது
இந்நிலையில் வடமாநிலம் மேற்குவங்காளத்தை சேர்ந்த 30 வயது இளைஞர், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரெயில்வே நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர், சூலூர்பேட்டையில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தவர். கஞ்சா பழக்கத்துடன் வாராந்திரம் சனிக்கிழமைகளில் சுற்றுலா போல சுற்றிப்பார்க்கும் இவர், ஜூலை 12ஆம் தேதியன்றே சம்பவ இடமான கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Also Read: மதுபோதை தகராறில் தாக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு…
சிறுமியின் அடையாளம் மூலம் உறுதி
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை பார்த்து அவர்தான் குற்றவாளி என உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த இளைஞர் தற்போது ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ரகசியமாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
அதிர்ச்சி வாக்குமூலம்
வடமாநில இளைஞரிடம் ஐஜி அஸ்ரா கார்க் நேரில் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது, சிறுமியை வன்கொடுமை செய்தது தொடர்பாக இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், காவல் துறை அதிகாரிகள், சம்பவ இடமான மாந்தோப்பிற்கு அழைத்து சென்று தடயங்கள் உறுதி செய்து வருகின்றனர்.
மூன்று புதிய பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு
இக்குற்றவாளி மீது ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்திய குற்றவியல் சட்டத்தின் புதிய பிரிவுகள் BNS 118, 351, 97 என்பவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
காவல்துறை தற்போது இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அவர் தற்போது கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு, இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியின் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியை பிடித்திருப்பது, போலீசாரின் தீவிர நடவடிக்கையின் ஒரு வெற்றியாக கருதப்படுகிறது. வழக்கு தொடர்பான விசாரணை விரிவாக நடைபெற்று வருவதால், மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.