திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேற்குவங்க இளைஞர் கைது!
Tiruvallur Minor Girl Case : திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 14 நாட்கள் நீடித்த தீவிர விசாரணைக்கு பிறகு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சிறுமி அவரை உறுதியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை, இளைஞர் ஒருவர் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படாமல் இருந்தார். பின்னர், அந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதில், சிறுமி தனியாக நடந்து செல்லும் போது, ஒருவரால் தூக்கிக்கொண்டு செல்லப்படுவது என்பது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வழக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தடயங்களை சேகரித்து, சிறுமி அளித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருவள்ளூரை ஒட்டியுள்ள சென்னை, செங்கல்பட்டு மற்றும் ஆந்திர மாநில எல்லை மாவட்டங்களில் போலீசார் முகாம் அமைத்து, 24 மணி நேரமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இளைஞர் ஒருவரை கைது செய்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அந்த இளைஞரை அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி சிக்கினார்.
இதையும் படிக்க : திருவள்ளூர் சிறுமி வழக்கு: உ.பி., இளைஞரிடம் போலீசார் விசாரணை




அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆந்திர உணவகத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதை அறிந்துகொண்டு அவர் இந்த சம்பவத்தை திட்டமிட்டு செய்துள்ளார். இந்த தகவல் மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவரின் புகைப்படத்தை சிறுமிக்கு காண்பித்தபோது, உறுதியாக அடையாளம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரைப் போன்ற தோற்றம் கொண்ட இரண்டு பேரின் புகைப்படங்களும் காட்டப்பட்ட நிலையில், சிறுமி அவர்களை இல்லை என மறுத்திருக்கிறார்.
இதையும் படிக்க : திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி..
இதன் மூலம், 14 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு, மேற்குவங்கத்தைச் சேர்ந்த குற்றவாளி கைதானது உறுதியாகியுள்ளது. இந்த வழக்கில் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாகும். ஆனால், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் விழிப்புணர்வும், நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.