திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி..
Tiruvallur Crime: திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், குற்றவாளியை தேடும் பணி போலீசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளி குறித்து சரியான தகவல் வழங்கினால் ஐந்து லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், ஜூலை 22, 2025: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் குற்றவாளியை தேடும் பணி காவல்துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குற்றவாளி குறித்து சரியான தகவல் கொடுக்கும் நபர்களுக்கு 5 லட்சம் வெகுமதி கொடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆரம்பாக்கத்தில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடந்து 9 நாள் ஆகியும் குற்றவாளி இன்னும் பிடிபடாத நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை:
10 வயது சிறுமி பள்ளி முடிந்து தனது பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் அவரை பின்தொடர்ந்து, ஆளில்லாத பகுதி வந்ததும் அந்த சிறுமியின் வாயை பொத்தி அருகில் இருக்கக்கூடிய காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கே அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது அந்த மர்ம நபர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சமயம் பார்த்து அங்கிருந்து சாதூர்யமாக அந்த சிறுமி தப்பித்து ஓடி வந்துள்ளார். உடனடியாக தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது பெற்றோரிடம் விவரித்துள்ளார்.
மேலும் படிக்க: ஆண் நண்பருடன் பேசிய பெண்.. ஆத்திரத்தில் குத்திக் கொன்ற காதலன்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்!
வெளியான சிசிடிவி காட்சிகள்:
இதனைக் கேட்ட அந்த சிறுமியின் தாயார் அதிர்ச்சியில் மனம் உடைந்து கதறி உள்ளார். உடனடியாக அந்த சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினார்.
மேலும் படிக்க: சென்னை: 100 கார்களை திருடி சொகுசு வாழ்க்கை… திறமையான எம்பிஏ பட்டதாரி திருடன் கைது!
மர்ம நபர் அந்த சிறுமியை பின்தொடரும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலானது. இதனைத் தொடர்ந்து குற்றவாளியை தேடும் பணியை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து டிஎஸ்பிக்கள் உட்பட பத்து தனி படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
ரூ. 5 லட்சம் வெகுமதி:
குற்றவாளி இன்னும் பிடிபடாத நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் குற்றவாளி குறித்து சரியான தகவல் வழங்கினால் ஐந்து லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தையும் காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் குறித்த அடையாளம் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்டக் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.