“கரூரில் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்”.. திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!
கரூரில் நடந்த இறப்புகளுக்குப் பிறகு தமிழகத்தின் ஒட்டுமொத்தத் தாய்மார்களும் இளைஞர்களும் தவெக தலைவருக்குப் பின்னால் திரண்டதாகக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, "கரூர் மக்களின் கண்ணீருடைய பாவத்தால்தான் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தோற்றார். தோற்ற பிறகு அவர் விட்ட கண்ணீர், கரூர் மக்களின் கண்ணீர் சாபம். அந்தப் பாவம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சும்மா விடாது" என்றார்.
சென்னை, ஜூலை 03: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் பிரம்மாண்ட இணைப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தவெக-வின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கரூர் விவகாரம் குறித்து அவர் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வகையில் அவரது பேச்சு குறித்து முழு விவரத்தையும் இக்கட்டுரையில் காணலாம். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் போது தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகித்த தருணத்தில், திமுக மற்றும் அதிமுக (இபிஎஸ் தரப்பு) இணைந்து ஆட்சி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க: “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!
எடப்பாடி மீது குற்றச்சாட்டு:
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மிதுன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரகசிய உடன்படிக்கை செய்ய முயன்றதாகக் குறிப்பிட்டார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகவை, திமுகவிடம் அடமானம் வைக்க முயன்ற இபிஎஸ்-ஸின் இந்த சுயநலப் போக்கை எதிர்த்தே 60%-க்கும் அதிகமான உண்மையான அதிமுக விசுவாசிகள் தவெக-வில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளின் பாராட்டு:
தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை தேவைப்பட்டபோது, அதிமுகவின் ஆதரவை நாடாமல் காங்கிரஸ் (5 எம்எல்ஏக்கள்), கம்யூனிஸ்ட் மற்றும் விசிக போன்ற மதச்சார்பற்ற கட்சிகளையே விஜய் அழைத்ததாகக் குறிப்பிட்டார். தவெக-வின் இந்த சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கொள்கை உறுதியைக் கூட்டணித் தலைவர்கள் நேரில் பாராட்டியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
“கரூரில் சில கணக்கு வழக்குகள் உள்ளன”
தொடர்ந்து, பேசும்போது கரூரைப் பற்றிக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, “எனக்கு கரூர் மிக முக்கியமான ஊர், அங்கு சில கணக்கு வழக்குகள் உள்ளன. அதை முடிக்காமல் விடமாட்டோம்” என்று ஆவேசமாகப் பேசினார். திமுக அரசு காவல்துறையைப் பயன்படுத்தி தவெக தொண்டர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்ததாகவும், செந்தில் பாலாஜியின் ‘கரூர் கம்பெனி’ ரவுடிசத்தாலும், பணத்தாலும் கரூரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் சாடினார். வரும் காலத்தில் இந்த அநீதிகளுக்குச் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், கரூர் மக்கள் ரவுடிசத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். எங்கள் தலைவரையும் எங்கள் கரூர் மக்களையும் நீங்கள் கைக வைத்தீர்கள். திரு. உதயநிதியின் வாழ்க்கைக்காக எங்களுடைய மக்களை காவல்துறை மூலமாக கொன்று குவித்தீர்கள். அதற்கான பதில் ஒரு நேரத்தில் கண்டிப்பாக நடக்கும், சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
பிரச்சாரங்களின் போது “காவல்துறை சூழ்ச்சி:
தேர்தல் சமயத்தில் கரூரில் தவெக-விற்கு எதிராக திட்டமிட்டுப் பெரும் சூழ்ச்சி வளைத்தை திமுக அரசு உருவாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். தவெக தலைவர் விஜய் திட்டமிட்டபடி 14 மாவட்டங்களுக்கும் ஏன் பிரச்சாரத்திற்குச் செல்ல முடியவில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் உடைத்தார். “எந்தெந்த இடங்களில் காவல்துறை ஆதரவு இருந்ததோ, அங்கே மட்டும்தான் பிரச்சாரம் செய்ய முடிந்தது. கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் பொறுப்பாளராக இருந்த செந்தில் பாலாஜி, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து தவெக தலைவர் வரும்போது போலீஸாரை விலகச் சொன்னார். லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் கூட்ட நெரிசலோ அல்லது அசம்பாவிதமோ ஏற்பட்டால், அந்தப் பழியை தவெக தலைவர் மீது போட திமுக கேவலமான அரசியல் சூழ்ச்சி செய்தது. இதன் காரணமாகவே கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களின் பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டன” என்று உண்மைகளைப் பட்டியலிட்டார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்.. செந்தில் பாலாஜி, அவரது தம்பியை வலைவீசி தேடும் போலீஸ்.. பெரும் பரபரப்பு!!
லண்டன் போய் செட்டிலாகுங்க:
கரூரில் நடந்த இறப்புகளுக்குப் பிறகு தமிழகத்தின் ஒட்டுமொத்தத் தாய்மார்களும் இளைஞர்களும் தவெக தலைவருக்குப் பின்னால் திரண்டதாகக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, “கரூர் மக்களின் கண்ணீருடைய பாவத்தால்தான் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தோற்றார். தோற்ற பிறகு அவர் விட்ட கண்ணீர், கரூர் மக்களின் கண்ணீர் சாபம். அந்தப் பாவம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சும்மா விடாது” என்றார். மேலும், “இந்த தவெக – அதிமுக இணைப்பிற்குப் பிறகு, உங்கள் குடும்பத்தில் நீங்கள்தான் கடைசி முதலமைச்சர். கொள்ளையடித்த பணத்தோடு உங்கள் குடும்பம் லண்டனுக்குக் கிளம்பி செட்டிலாக வேண்டியதுதான். கரூருக்குப் பிறகு எங்களின் பரம எதிரி நீங்கள்தான்” என்று கூறினார்.