“ஆட்சியில் பங்கு வேண்டும்.. ஆனால் வேண்டாம்”… என்ன சொல்கிறது விசிக?
2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, விசிக - திமுக கூட்டணியைச் சுற்றிய அரசியல் விவாதங்கள் மீண்டும் தீவிரமாகியுள்ளன. ஆட்சிப் பங்கிற்கான விசிகவின் நீண்டநாள் கோரிக்கை குறித்து புதிய விளக்கங்கள் எழுந்துள்ள நிலையில், கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் விசிக தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்
சென்னை, நவம்பர் 19: ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், சுற்றுப்பயணம் செய்வதிலும் வீயூகம் வகுத்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, விஜய் அரசியல் வருகையால் தேர்தல் களம் இம்முறை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அளவு இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தற்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்துவதால், தமிழகத்தில் பெரும் கட்சியாக உள்ள திமுக, அதிமுகவுக்கு இது கட்டாயம் பெரும் சிக்கலாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Also read: ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..
ஆட்சியில் அதிகாரம் கேட்கும் கட்சிகள்:
அனைத்து கட்சிகளும் இப்படி ஆட்சியில் பங்கு கேட்பதற்கு முக்கிய காரணம் விஜய் தான். தனது முதல் மாநாட்டிலேயே தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் வழங்கப்படும் என பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது முதல் அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை முன்வைக்க தொடங்கிவிட்டன. இதன் மூலம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே இத்தேர்தலில் பிளவு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.




அதிருப்தியில் தமிழக காங்கிரஸ்:
ஏற்கெனவே, திமுக மீது தமிழக காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதோடு, தவெகவுடன் அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது விசிகவும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. அதேசமயம், ஆட்சியில் பங்கு வேண்டாம் என்ற முடிவையும் கூறி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு என்பதை முன்பே கேட்கிறோம்:
அந்தவகையில், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “1999ல் விசிக தேர்தல் அரசியலுக்கு வந்ததிலிருந்து, ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். 2016ஆம் ஆண்டு இதைக் குறித்து அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து கருத்தரங்கம் நடத்தி, அந்தக் கோரிக்கையை மக்களிடம் வெளிப்படையாக எடுத்துச் சென்றோம். தேவையான நேரத்தில் அந்த கோரிக்கையை மீண்டும் முன்வைப்போம்,” என்று தெரிவித்தார்.
விசிகவுக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையில் சீட் வேண்டும்:
மேலும் அவர், “2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் விசிக ஆட்சிப் பங்கிற்கு கோரிக்கை விடுக்கும் சூழல் இல்லை. இந்தத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இம்முறை விசிகக்குச் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றும் கூறினார்.
Also read: “2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்
விசிக நிலைப்பாட்டில் மாற்றமில்லை:
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் கூறும்போது, “ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது குறித்த எங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை. நீண்ட காலமாக இருந்துவரும் அந்தக் கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை. ஆனால் 2026 தேர்தலுக்காக திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரும் முடிவில் இல்லை. ‘இந்த முறை அந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை’ என்ற அர்த்தத்திலேயே ரவிக்குமார் பேசியிருப்பார்,” என்று விளக்கம் அளித்தார்.