“மராத்தானில் 3 கி.மீ ஓடிய ஒரே இந்திய முதல்வர் விஜய்”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்!!
தான் ஒரு தேசிய அளவிலான கூடைப்பந்து வீரராக இருந்து, நேரு ஸ்டேடியம் விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்து, இன்று விளையாட்டுத் துறை அமைச்சராக உயர்ந்துள்ளதை நினைவுகூர்ந்த அவர், மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரையைக் கூறினார். இன்றைய இளைஞர்கள் பலர் தங்களுக்கு மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் ஏற்படும் போது, மது மற்றும் போதைப்பொருட்களை நோக்கித் திசைமாறி விடுகிறார்கள்.
சென்னை, ஜுன் 26: சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட போதைப்பொருள் எதிர்ப்பு மராத்தான் (Anti-Drug Marathon) ஓட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் ஓடி விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், முதலமைச்சரின் இந்தச் செயல்பாடு மற்றும் இளைஞர்களுக்கான அரசின் விளையாட்டுத் திட்டங்கள் குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதன்படி, நம்முடைய முதல்வர் அண்ணன் சி.ஜோசப் விஜய் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எத்தனையோ அலுவல் பணிகள் இருக்கின்றன. அந்தப் பணிகளுக்கு மத்தியிலும், மக்களுக்காகவும், இளைஞர்களின் நல்வாழ்விற்காகவும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, சரியாக 6.15 மணிக்கு மராத்தான் திடலுக்கு வந்து 3 கிலோமீட்டர் தூரம் நம்மோடு ஓடி முடித்துள்ளார்.
மேலும் படிக்க: ‘Start Run, Stop Drugs’ ஓட்டம்.. மக்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..
இந்திய வரலாற்றிலேயே முதல்முறை:
தமிழக வரலாற்றிலோ அல்லது இந்திய அரசியல் வரலாற்றிலோ, ஒரு மாநில முதலமைச்சர் அதிகாலையில் எழுந்து வந்து மராத்தான் போட்டியில் நேரில் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் ஓடியது இதுவே முதல் முறை. இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஒரு ‘யூத் சிஎம்’ எங்குமே கிடையாது. இந்த அரசு முதன்மையாக இளைஞர்களுக்காகவும், பெண்களுக்காகவும் மட்டுமே செயல்படும் அரசு” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
25,000 பேர் பங்கேற்பு – விளையாட்டுக்கு மாறும் தமிழகம்:
இந்த மராத்தான் போட்டிக்கு ஆன்லைன் மூலமாக வெறும் இரண்டு நாட்களிலேயே 15,000 பேர் பதிவு செய்திருந்தனர். அதைத் தாண்டியும், பதிவுக் கட்டணம் இல்லாமல் நேரடியாக 10,000-க்கும் மேற்பட்டோர் திரண்டதால், ஒட்டுமொத்தமாக 25,000-க்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 10 வயதுச் சிறுவர்கள் முதல் 70 வயது முதியவர்கள் வரை எந்தவொரு வயது வித்தியாசமும் இன்றிப் பங்கேற்ற முதல் மராத்தான் இதுவாகும். “இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இதேபோல ஏதேனும் ஒரு விளையாட்டு நிகழ்வு அல்லது மராத்தான் போட்டி தொடர்ந்து நடத்தப்படும். முதலமைச்சரைப் போலவே ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஆரோக்கியமாக மாறப்போகிறது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
காலி மைதானங்கள் விளையாட்டுத் திடல்களாக மாறும்:
விளையாட மைதானங்கள் இல்லை என்று கவலைப்படும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியை அமைச்சர் பகிர்ந்து கொண்டார். “முதலமைச்சர் விஜய் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் எந்தவொரு அரசுத் துறையின் கீழ் காலி மைதானங்கள் இருந்தாலும், அவற்றை எஸ்டிஏடி (SDAT – Sports Development Authority of Tamil Nadu) விளையாட்டுத் துறையோடு ஒப்பந்தம் செய்து, உடனே சுற்றிலும் வேலி அமைத்து, மின்விளக்கு வசதிகள் செய்து இளைஞர்கள் விளையாடுவதற்குத் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கான பணிகள் இப்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் விளையாடுவதற்கான விளையாட்டுத் திடல்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.
உண்மையான ஸ்டாமினா எது?:
தான் ஒரு தேசிய அளவிலான கூடைப்பந்து வீரராக இருந்து, நேரு ஸ்டேடியம் விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்து, இன்று விளையாட்டுத் துறை அமைச்சராக உயர்ந்துள்ளதை நினைவுகூர்ந்த அவர், மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரையைக் கூறினார். இன்றைய இளைஞர்கள் பலர் தங்களுக்கு மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் ஏற்படும் போது, மது மற்றும் போதைப்பொருட்களை நோக்கித் திசைமாறி விடுகிறார்கள். நண்பர்களுக்குள் ஜாலியாகப் பேசும்போது, ‘யார் நிறைய மது குடிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அதிக ஸ்டாமினா’ என்று தவறாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அது உண்மையான ஸ்டாமினா கிடையாது. அதிகாலையில் ஷூவை மாட்டிக் கொண்டு 3 கிலோமீட்டர் அல்லது 6 கிலோமீட்டர் தூரம் ஓடி யார் பந்தய எல்லையைத் தொடுகிறார்களோ, அதுதான் உண்மையான ஸ்டாமினா மற்றும் உடற்தகுதி .
மேலும் படிக்க: சட்டப்பேரவையில் குட்டி கதை சொல்லி விமர்சித்த முதல்வர் விஜய்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த ரியாக்ஷன்!!
விளையாட்டு வீரர்களான எங்களுக்கு ஏதேனும் மன அழுத்தம் வந்தால், நாங்கள் உடனே மைதானத்திற்குச் சென்று ஒரு மணி நேரம் விளையாடுவோம்; அந்த அழுத்தம் தானாகவே ஓடிவிடும். எனவே, இளைஞர்கள் அனைவரும் போதையைத் தவிர்த்து விளையாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.