AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கூட்டணிக்காக உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது”.. திமுக மீது திருமாவளவன் கடும் தாக்கு!!

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் திராவிடக் கட்சிகளின் 'முதலுக்கே மோசம்' வந்துவிட்டதைக் காட்டுகிறது என்று எச்சரித்த திருமாவளவன், தேர்தல் முடிவுகள் குறித்துத் தான் முன்பே கணித்திருந்த சில ரகசியங்களையும் உடைத்தார். "தேர்தலுக்கு முன்பே ஒரு தொங்கு சட்டசபை தான் அமையும் என்று நான் தனிப்பட்ட முறையில் யூகித்தேன் என்றார்.

“கூட்டணிக்காக உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது”.. திமுக மீது திருமாவளவன் கடும் தாக்கு!!
திருமாவளவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Jun 2026 07:28 AM IST

சென்னை, ஜுன் 29: தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தற்போதைய அரசியல் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி, ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மறைமுகமாகவும், மிகக் காட்டமாகவும் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விசிக பொதுமேடை ஒன்றில் அவர் உணர்ச்சிப்பொங்கப் பேசிய இந்த கருத்துக்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளன. விசிக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை இன்றோ நேற்றோ திடீரென எழுப்பவில்லை என்று சுட்டிக்காட்டிய திருமாவளவன், கால் நூற்றாண்டுக்கு முன்பே ‘அதிகாரப் பகிர்வு’ என்ற அரசியல் கோட்பாட்டைத் தமிழகத்தில் முதன்முதலில் பேசியதே விசிக தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் கூட்டணிக்காக எங்களின் கொள்கைகளையோ, மக்களின் உரிமைகளையோ எப்போதுமே விட்டுக்கொடுக்க முடியாது என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்தார்.

இதையும் படிக்க : மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்

காபி, ஆற்றங்கரை உவமைகளால் பதிலடி:

கூட்டணி ஆட்சியில் விசிக-வின் பங்களிப்பை விமர்சிப்பவர்களுக்கும், கூட்டணிக்குள்ளேயே இருக்கும் சில முரண்பாடுகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் சில எதார்த்தமான உவமைகளைக் கையாண்டார். “ஒரு ஹோட்டலுக்குப் போனால் காபி குடிப்பது தவறா? அல்லது ஒரு ஆற்றங்கரைக்குச் சென்றால் தாகத்திற்கு நீரைப் பருகினால் தான் தவறா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “சும்மா ஆதரவுதானே கொடுக்கிறதா சொன்னீங்க, அதற்குள் போய் அமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துட்டீங்களே… நான் ஆற்றங்கரையில் தானே சும்மா உட்காரச் சொன்னேன், நீங்க அள்ளிக்குடிக்கிறீங்களே… நான் மரத்து நிழலில் தானே அமரச் சொன்னேன், நீங்க பழத்தைப் பறித்துத் தின்கிறீங்களே… என்று பலராலும் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எங்களைக் கேள்வி கேட்கிறார்கள்” என தங்களின் அதிகாரப் பங்கீட்டை சாடினார்.

திமுக கூட்டணியை உடைக்க நடந்த சதி:

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தன்னை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, திமுக தலைமையிலான இந்த பலமான கூட்டணியை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று பல எதிர்த்தரப்பினர் தீவிரமாகச் சதித் திட்டம் தீட்டினர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை என்று திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எந்தவித அகந்தையிலும் நான் இதைச் சொல்லவில்லை. மாறாக நெஞ்சுயர்த்தி, தலைநிமிர்ந்து மிக உறுதியாகச் சொல்வேன்; தேர்தலுக்கு முன்னால் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தக் கூட்டணியைச் சிதறிவிடாமல் கட்டித் தற்காத்துக் காப்பாற்றியவன் இந்த திருமாவளவன் தான்” என்று ஆவேசமாக முழங்கினார்.

திராவிடக் கட்சிகளுக்கு எச்சரிக்கை:

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் திராவிடக் கட்சிகளின் ‘முதலுக்கே மோசம்’ வந்துவிட்டதைக் காட்டுகிறது என்று எச்சரித்த திருமாவளவன், தேர்தல் முடிவுகள் குறித்துத் தான் முன்பே கணித்திருந்த சில ரகசியங்களையும் உடைத்தார். “தேர்தலுக்கு முன்பே ஒரு தொங்கு சட்டசபை தான் அமையும் என்று நான் தனிப்பட்ட முறையில் யூகித்தேன். ஆளும் திமுக-வுக்குப் பெரும்பான்மைப் பற்றாக்குறை ஏற்படும், நம்முடைய ஆதரவு அவர்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும் என்றுதான் நான் கருதினேன். ஆனால், தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் எல்லாம் தலைகீழாக மாறிப்போனது” என்று விவரித்தார்.

இதையும் படிக்க : குழந்தைக்கு பின்னால் ஒளிந்துகொண்டு…. அமைச்சர் பதவி விலக வேண்டும் – திமுக ஆர்பாட்டம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துடன் ஒப்பீடு:

இந்த எதிர்பாராத தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் மாற்றம் எப்படி சாத்தியமானது என்பதற்குப் பொதுமக்களின் எழுச்சியையே அவர் காரணமாகக் கூறினார். இது ஏதோ அரசியல் கட்சிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட மாற்றம் அல்ல; மாறாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக எப்படி ஒரு பிரம்மாண்ட மக்கள் போராட்டம் எந்தவொரு அரசியல் பின்னணியும் இன்றி தன்னிச்சையாக வெடித்ததோ, அதே போன்ற ஒரு தார்மீக மக்கள் எழுச்சியாகவே தற்போதைய தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன என்று கூறினார்.

Follow Us