Thirumavalavan: திமுகவிடம் கூட்டணி கட்சிகள் அடிமையா..? எழுந்த விமர்சனம்.. திருமாவளவன் பதில்..!
Thirumavalavan on DMK Alliance: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஐ, சிபிஎம் மாநிலச் செயலாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரிக்கை வைத்தனர். எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த நிலையில், திருமாவளவன் மற்றும் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட் 6: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Viduthalai Chiruthaigal Katchi) தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 6ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை (Tamil Nadu CM MK Stalin) சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிகமாக அரங்கேறும் ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர். சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் கவின் செல்வகணேஷ் என்ற நபரை, சுர்ஜித் என்பவர் தனது அக்காவை காதலித்ததற்காக கொலை செய்தார். இதையடுத்து, இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆணவக் கொலையை (Honour Killing) கண்டித்து பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, முதலமைச்சர் சந்திப்புக்கு பிறகு விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி குறித்து பேசினார்.
திமுக கூட்டணி:
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 5ம் தேதி திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சனம் செய்தார். அதில், “தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளது. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடிமையாக இருப்பதால் இந்த ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். மக்கள் பிரச்சனைகளுக்கு போராட்டம் நடத்தினால் அடுத்த முறை சீட் கிடைக்காது என்ற பயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மவுனம் காக்கிறார்கள். திமுக கொஞ்சம், கொஞ்சமாக கம்ப்யூனிஸ்ட் கட்சிகளை விழுங்கிக்கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.




முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சி தலைவர்கள்:
அக்கறையுடன் நலம் விசாரித்த அன்புச் சகோதரர் – எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுக்கும் – கொள்கைத் துணையாய் உடன் நிற்கும் மதிப்பிற்குரிய தோழர்கள் இரா.முத்தரசன் மற்றும் @Shanmugamcpim ஆகியோருக்கும் என் உளமார்ந்த நன்றி! https://t.co/lnXbxSijeO
— M.K.Stalin (@mkstalin) August 6, 2025
இதற்கு பதிலளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “பாரதிய ஜனதா கட்சியிடம் அதிமுக இருப்பது போல, மற்றவர்களும் இருப்பார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நினைப்பது தவறு.” என தெரிவித்தார். தொடர்ந்து, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், “அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை பெற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி , ஒரு கட்சி குறித்து நிலைப்பாடுகளை மாற்றி பேசியுள்ளார். பாஜக கூட்டணிக்குள் எடப்பாடி பழனிசாமிதான் சிக்கிக்கொண்டுள்ளார். பாஜகவின் நிர்பந்தத்திற்கும், நெருக்கடிக்கும் எடப்பாடி பழனிசாமி ஆளாகிவிட்டார். எனவே, இவரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.