திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை.. ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்த முதல்வர்.. காவல்துறைக்கு பறந்த உத்தரவு
Tiruppur Murder : திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட சண்முகவேலின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, ரூ.1 கோடி நிதியுதவியும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 06 : திருப்பூரில் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (Tiruppur SSI Murder) குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin). மேலும், கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் காவல் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதியான இன்று திருப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உலுக்கியது. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட 3 பேர் தற்போது வரை தலைமறைவாகி உள்ளனர். இந்த சூழலில், செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்து வந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணியின்போது விசாரிக்க சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.




Also Read : நாமக்கல்லில் அதிர்ச்சி.. 3 மகள்களை கழுத்து அறுத்து கொன்ற தந்தை.. பகீர் பின்னணி!
ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூபாய் ஒரு கோடி நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/J9HJJzmrQN
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 6, 2025
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சண்முகவேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டார்.
Also Read : அதிகரிக்கும் சைபர் கிரைம்.. ஜூலையில் மட்டும் ரூ. 1.65 கோடி மீட்பு – சென்னை காவல் துறை தகவல்..
எஸ்எஸ்ஐ கொலை செய்யப்பட்டது எப்படி?
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது 100 எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதாவது, அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் இரண்டு பேர் தகராறில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சண்முகவேல் சம்பவம் இடத்திற்கு விரைந்தார்.
அப்போது அங்கு தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்க பாண்டியன் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. அப்போது மகன் தங்கபாண்டியனை, மூர்த்தி அறிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அங்கு வந்த சண்முகவேல் இதனை தடுக்க முயற்சித்த போது, ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், காவல் ஆய்வாளரை ஓட ஓட வெட்டிக் கொலை உள்ளார்.
மேலும் அவருடன் வந்த ஓட்டுனரையும் அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்து போலீசார் விரைந்தனர். சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கடந்த சண்முகவேலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.