தூத்துக்குடியில் இரட்டை கொலை.. தோண்ட தோண்ட சடலங்கள்.. கஞ்சா கும்பல் செய்த கொடூரம்!
Thoothukudi Double Murder : தூத்துக்குடி மாவட்டத்தில் சகோதரர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டதால், இருவரும் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைதாகி உள்ளனர்.

தூத்துக்குடி, ஆகஸ்ட் 02 : தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை (Thoothukudi Double Murder) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காணாமல் போன அண்ணன் தம்பியின் உடல்கள் 6 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா புகைத்ததை தட்டிக்கேட்ட ஆத்திரத்தில், கும்பல் ஒன்று சகோதரர்களை கொலை செய்து புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. 2025 ஜூலை 31ஆம் தேதி உப்பார் ஓடை அருகே நாய்கள் மனித கையை உண்பதை பார்த்து, அக்கம் பக்கத்தினர் தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு ஒரு ஆணின் சடலம் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டனர். இதனை அடுத்து, காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மற்றும் தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது, அந்த குழியில் மற்றொரு ஆண் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு உடல்களும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
தூத்துக்குடியில் இரட்டை கொலை
இதனை அடுத்து, இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, உயிரிழந்தவர்கள் பொன்ராஜின் மகன்கள் பி. மாரிபாண்டி (35), பி. அருள்ராஜ் (30) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், அருள்ராஜ் பார்வை மாற்றுத்திறனாளி ஆவார். சகேதரர்களான இருவரும் காணாமல் போனதாக 2025 ஜூலை 27ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Also Read : போதைப்பொருள் பழக்கம்.. போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கிய இருவர்..




ஜூலை 27 ஆம் தேதி அதிகாலையில் மாரிபாண்டியும் அருள்ராஜும் தங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ரிதன் என்பவரும், அவரது நண்பர்களான எஸ். முகமது மீரான் (20), எம். சங்கர் (20) மற்றும் எஸ். சதீஷ் (20) ஆகியோர் கற்கள் மற்றும் தடிகளால் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கஞ்சா கும்பல் செய்த கொடூரம்
அதில் அவர்கள் பலத்த காயம் அடைந்து மயக்க நிலைக்கு சென்றனர். அவர்களை உப்பார் ஓடைக்கு எடுத்துச் சென்ற பிறகு, நால்வரும் சேர்ந்து மாரிபாண்டி மற்றும் அருள்ராஜைக் கொன்று அவர்களின் உடல்களை குழி தோண்டி புதைத்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு,
சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே இவர்கள் அனைவரும் கஞ்சை புகைத்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனால், அருள்ராஜ் மற்றும் பாண்டியன் அவர்கள் கண்டித்துள்ளனர். இந்த ஆத்திரத்தில் இரண்டு பேரை கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
Also Read : மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!
இந்த இரட்டை கொலை தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைதாகி உள்ளனர். இறந்த சகோதரர்களின் குடும்பத்தினர் தங்கள் புகாரை போலீசார் முறையாக விசாரித்து, இருவரையும் தேட உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டினர். இதனை அடுத்து, தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் காந்திமதி திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.