நெல்லை ஆணவக் கொலை.. கவினின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்!
Tirunelveli Honour Killing : திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உலுக்கி உள்ளது. நீதி கோரி கவினின் உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் கடந்த ஐந்த தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது அவர்கள் கவினின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி, ஆகஸ்ட் 01 : திருநெல்வேலியில் ஆணவக் கொலை (Tirunelveli Honour Killing) செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் (Kavin Murder) உடலை பெற பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கவினின் உடல் வாங்க மறுத்து, அவரது பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களாக போராட்டத்தி ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அந்த போராட்டம் முடிவுக்கு வருகிறது. 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உலுக்கியது. காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதர் கவினை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் சகோதர் சுர்ஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவினின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்
இதற்கிடையில், கவினின் பெற்றோர் நீதி கோரி போராட்டத்தில் ஐந்து நாட்களாக ஈடுபட்டு வந்தனர். தங்களுக்கு நிதி வேண்டாம் என்று நீதி வேண்டும் என கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கவினின் உடலையும் அவர்கள் வாங்க மறுத்து வந்துள்ளனர். மேலும் பெண்ணின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து, பெண்ணின் தந்தையும், சப் இன்ஸ்பெக்டருமான சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read : நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை கைது… விசாரணை தீவிரம்




மேலும், பெண்ணின் தாய் கிருஷ்ணகுமாரியை தேடி வருகின்றனர். இந்த சூழலில், கவினின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐந்து நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போராட்டம் முடிவுக்கு வருகிறது.
கவின் கொலை செய்யப்பட்டது எப்படி?
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயதான கவின் செல்வகணேஷ். இவர் சென்னையில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் அவ்வப்போது, சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவரும் திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரைச் சேர்ந்த சுபாஷினியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வர, கடுமையாக எதிர்த்துள்ளதாக தெரிகிறது.
Also Read : நெல்லை ஆணவக் கொலை.. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
மேலும், பெண்ணின் தம்பி சுர்ஜித் கவினிடம் பேசக் கூடாது என கூறியுள்ளார். இருப்பினும், இருவரும் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில், 2025 ஜூலை 27ஆம் தேதி பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கவின் வந்துள்ளார். இதனை அறிந்த சுர்ஜித் அங்கு வந்து, கவினை தனியாக அழைத்து பேசியுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக கவினை வெட்டிவிட்டு தப்பியுள்ளார். இதில், கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.