திருநெல்வேலி கவின்குமார் ஆணவப்படுகொலை.. போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு..
Tirunelveli Crime News: பட்டியலின இளைஞர் தனது அக்காளை காதலித்து வந்ததன் காரணமாக தம்பி சுர்ஜித் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அக்காவின் காதலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்த தம்பி இளைஞரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து உயிரிழந்த இளைஞரின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரவணன் கிருஷ்ணகுமாரி சுர்ஜித் ஆகிய மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி தம்பதியினர் இவர்கள் இருவரும் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும் 26 வயது மகளும் இருக்கின்றனர். சரவணன் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடியில் வசித்து வந்த போது அவரது மகளும் ஏரல் பகுதியை சேர்ந்த ஆறுமுகமங்கலம் பகுதியில் வசிக்கும் கவின் குமார் என்ற 26 வயது இளைஞர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த கவின் குமார், சென்னை துறைப்பாக்கத்தில் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது சரவணனின் மகளுடன் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளார். இவர்களின் காதல் விவகாரம் சரவணன் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆனால் கவின் குமார் வேறு ஜாதியை அதாவது பட்டியலின பிரிவை சேர்ந்தவர் என்பதால் சரவணன் குடும்பத்தினர் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைத்து வெட்டி கொலை:
இதற்கிடையில் கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதன் காரணமாக சரவணன் மகள் பணியாற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த அவரின் தம்பி சுர்ஜித் மருத்துவமனைக்கு சென்று கவின்குமாரை பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளார். அவரும் நம்பி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தான் மறைத்து வைத்திருக்கும் அறிவாளை எடுத்து கவின் குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கவின்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: காதல் விவகாரம்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்து படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்!
வாக்குமூலம் அளித்த சுர்ஜித்:
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கொலை குற்றவாளியான சுர்ஜித்தை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது வாக்குமூலம் அளித்த சுர்ஜித், “ என்னுடைய அக்காளும் கவினும் பழகுவதை நானும் என்னுடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கவினிடம் பலமுறை தொடர்ந்து அக்காளிடம் பழகுவதை விட்டுவிடுமாறு கூறினேன். ஆனால் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசி வந்தார்.
அக்கா வேலை செய்யும் மருத்துவமனைக்கு கவின்குமார் வந்ததை அறிந்து அங்கே சென்று அவரை பேச்சு வார்த்தைக்காக அழைத்து சென்றேன். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த அறிவாளை வைத்து சரமாரியாக வெட்டினேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: தலைக்கேறிய போதை.. திருட சென்ற வீட்டில் படுத்து தூங்கிய நபர்.. கையும், களவுமாக சிக்கினார்!
காவல் தம்பதியினர் மீது வழக்கு பதிவு:
இந்த சம்பவத்தை தொடர்ந்து கவின்குமாரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் சுர்ஜித் தாய் தந்தையான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்களின் தூண்டுதலின் பேரில் தான சுர்ஜித் தனது மகனை கொலை செய்துள்ளார் என்பதால் அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் சுர்ஜித் ஆகிய மூன்று பேர் மீது வன்கொடுமை உட்பட ஆறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.