Tirunelveli Honour Killing: கவின் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! நாங்க உண்மையா காதலிச்சோம்.. சுபாஷினி வெளியிட்ட வீடியோ..
Kavin Murder Case: திருநெல்வேலியில் நடந்த ஆணவக் கொலை வழக்கில், கவின் காதலி சுபாஷினி, தனது பெற்றோருக்கும் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கவினுடனான தனது உறவை விளக்கியுள்ள அவர், தம்பி சுர்ஜித்தின் செயலால் ஏற்பட்ட துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திருநெல்வேலி, ஜூலை 31: திருநெல்வேலியை சேர்ந்த ஐடி ஊழியரான கவின் என்பவர் ஆணவக் கொலை (Tirunelveli Honour Killing Case) செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினியின் தம்பி சுர்ஜித், தந்தை சரணவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு (CBCID) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கவின் கொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கும், எனது தாய், தந்தைக்கு சம்பந்தம் இல்லை எனவும், எனக்கும் கவினுக்கும் இடையேயான உறவு இதுதான் என்பது குறித்தும் சுபாஷினி வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
ALSO READ: நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை கைது… விசாரணை தீவிரம்
சுபாஷினி வெளியிட்ட வீடியோ:
கவினை காதலித்தது, உண்மை சுபாஷினி வெளியிட்ட பரபரப்பு காணொளி !
— Political Memes (@Political_satir) July 31, 2025
திருநெல்வேலியில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி வெளியிட்ட வீடியோவில், “கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள்.
நானும், கவினும் உயிருக்கு உயிராக உண்மையாக காதலித்தோம். கவினிடம் நான் அவகாசம் கேட்டிருந்ததால் அப்பாவிடம் எங்கள் காதல் குறித்த தகவலை சொல்லவில்லை. அதற்குள் என் தம்பி சுர்ஜித், எங்கள் காதல் விவகாரத்தை எனது அப்பாவிடம் சொல்லிவிட்டான். அப்போது, என் அப்பா என்னிடம் காதலிக்கிறாயா என்று கேட்டபோது, அப்போது இல்லை என்று கூறி சமாளிக்கவே முயற்சித்தேன்.
செட்டிலாக 6 மாதம் டைம் வேண்டும் என்று கவின் தெரிவித்ததால் அப்பா கேட்டபோது காதலிக்கவில்லை என பொய் சொன்னேன்” என்று கூறியுள்ளார்.
ALSO READ: நெல்லை ஆணவக் கொலை.. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
கவின் கொலை செய்யப்பட்டது எப்படி..?
தூத்துக்குடியை சேர்ந்த கவின் செல்வகணேஷூம், திருநெல்வேலி கேடிசி நகரைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்திற்கு தெரிய வர, பெண்ணின் தம்பியான சுர்ஜித், கவினிடம் தனது அக்காவிடம் பேசக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இப்படியான சூழ்நிலையில், கவின் தனது தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை என்று பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கடந்த 2025 ஜூலை 27ம் தேதி வந்துள்ளார். இதை அறிந்த சுர்ஜித் கவினை தனியாக அழைத்து பேசியபோது, வாக்குவாதம் ஏற்பட்டு சுர்ஜித் கவினை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனால், சம்பவ இடத்திலேயே கவினின் உயிர் பிரிந்துள்ளது. இதனை தொடர்ந்து, சுர்ஜித் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்திற்கு தற்போது பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.