எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை.. அஜித்குமார் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பின் நிகிதா பேட்டி..
Ajith Kumar Custodial Death Case: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பாக பேசிய நிகிதா, என்ன நடந்தது என்று தெரியாமல் ஒருவரையே குற்றம் சாட்டி திசை திருப்ப பார்க்கிறார்கள். இறந்து போனது வேதனையான விஷயம்தான் என தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை அடுத்த மடப்புரம் அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறையினர் அவரை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கிடையில் நகை திருட்டுப் போனதாக புகார் அளித்த நிகிதா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசுகையில் ஒருவர் இறந்தது வேதனையான விஷயம் தான் அந்த வேதனை எங்களுக்கும் இருக்கிறது எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
கோவில் காவலாளியான அஜித்குமாரின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
15 நாட்களாக தீவிர விசாரணையில் சிபிஐ அதிகாரிகள்:
இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரையும் அதேபோல் நகை திருட்டு போனதாக புகார் அளித்த நிகிதாவிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தாய் மற்றும் சகோதரரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் நிகிதாவிடமும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் சுமார் மூன்று மணி நேரம் வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க: அரிவாளால் போலீசாரை தாக்க முயன்ற 17 வயது சிறுவன்.. தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்..
எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை – நிகிதா:
இந்நிலையில் ஜூலை 29 2025 தேதியான நேற்றும் நிகிதாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ சம்பவம் நடந்த நேரத்தில் நடந்ததை பற்றி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். என்னைப் பற்றி தவறான தகவல்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை. வெளியே சென்று எந்த வேலையும் செய்ய முடியவில்லை.
மேலும் படிக்க: ’கார் சாவியை அஜித்குமார் வாங்கவில்லை’ – காவலாளி முருகன்.. மடப்புரம் வழக்கில் புதிய திருப்பம்..
என்ன நடந்தது என்று தெரியாமல் ஒருவரையே குற்றம் சாட்டி திசை திருப்ப பார்க்கிறார்கள். இறந்து போனது வேதனையான விஷயம்தான். அந்த வேதனை எங்களுக்கும் இருக்கிறது வேண்டுமென்று யாராவது இப்படி செய்வார்களா? காய்கறியும், மளிகை பொருட்கள், பெட்ரோல், ஒரு உணவகத்திற்கு சென்று சாப்பிட கூட முடியவில்லை. கல்லூரியிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை.
அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் பேசவில்லை:
எங்கள் தரப்பில் தவறு இருக்கிறதா என ஆராய்ந்து பார்க்காமல் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் விசாரிப்பதை குறித்து நாங்கள் எதுவுமே கூறவில்லை. அது அவர்களின் கடமை. நாங்கள் இந்த வழக்கில் எதுவுமே செய்யவில்லை நகை திருட்டுப் போனதாக புகார் மட்டுமே அளித்தோம். அதை மட்டும்தான் நாங்கள் செய்தோம். அதனை தொடர்ந்து நாங்கள் வீட்டுக்கு சென்று விட்டோம். அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நாங்கள் இதுவரை பேசவில்லை. மீண்டும் விசாரணைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைப்பதாக கூறியிருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்