இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்.. 25 சவரன் நகையை பறிகொடுத்த பெண்..
Virudhunagar Crime: விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட தனது காதலனுக்காக வீட்டில் இருந்து சுமார் 25 சவரன் வரை நகையை கொடுத்துள்ளார். நகையை திருப்பி கேட்டப்போது அந்த நபர் தர மறுத்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,

விருதுநகர், ஆகஸ்ட் 3, 2025: இன்ஸ்டாகிராம் காதல் மூலம் 25 சவரன் நகையை பறிகொடுத்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த விவின் என்ற 22 வயது நபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியது. விவின் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை பேசியுள்ளார். அதேசமயம் அவ்வப்போது அந்த பெண்ணிடம் இருந்து சிறிது சிறிதாக நகையையும் பணத்தையும் வாங்கி வந்துள்ளார். அந்தப் பெண்ணும் காதல் மோகத்தில் வீட்டிற்கு தெரியாமல் நகை மற்றும் பணத்தை விவீனுக்கு ரகசியமாக கொடுத்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 25 சவரன் வரை அந்த பெண்ணிடம் இருந்து விவின் நகையை பெற்றுள்ளார்.
வீடு கட்ட பணம் கேட்ட காதலன்:
தொடர்ச்சியாக அந்தப் பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு வந்துள்ளார். அதேபோல் சமீபத்தில் விவின் வீடு கட்ட பணம் கொடுக்குமாறு பேசியது அப்போது அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டு, தான் கொடுத்த நகையை திருப்பித் தருமாறு விவினிடம் கேட்டுள்ளார். ஆனால் விவின் அந்த நகையை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதேசமயம் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் இரட்டை கொலை.. தோண்ட தோண்ட சடலங்கள்.. கஞ்சா கும்பல் செய்த கொடூரம்!
விவினை தேடும் பணியில் காவல் துறை:
இதனைத் தொடர்ந்து அந்த பெண் மற்றும் விவினுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. விவின் அந்த பெண்ணிடம் இருந்து தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: சிறுவன் கடத்தப்பட்டு கொலை.. ரூ.5 லட்சம் தராததால் ஆத்திரம்.. அதிர்ந்த பெங்களூரு!
அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை ஆய்வாளர் அசோக் பாபு தலைமையில் போலீசார் விவினை தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் காதலை நம்பி கல்லூரி மாணவி சுமார் 25 சவரன் நகையை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.